எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி: நடப்பு சாம்பியன் ஐஓசி அணி வெளியேற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஐஓசி - மத்திய தலைமை செயலக அணியுடன் மோதியது. இதில் மத்திய தலைமை செயலக அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஐஓசி அணியை தோற்கடித்தது. அந்த அணி சார்பில் மொகமது ஷாரிக் (40 மற்றும் 58-வது நிமிடம்) 2 கோல்களும் ஹசன் பாஷா (20-வது நிமிடம்), ஆர்.மணிகண்டன் (24-வது நிமிடம்), மொகமது உமர் (35-வது நிமிடம்), அனிகேத் பாலாசாஹேப் (51-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

ஐஓசி அணி தரப்பில் குர்ஜிந்தர் சிங் (4 மற்றும் 38-வது நிமிடம்) இரு கோல்கள் அடித்தார். இந்த தோல்வியால் ஐஓசி அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 4 ஆட்டங்களில் விளையாடிய ஐஓசி 2 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்றது. இதே 7 புள்ளிகளை பெற்றிருந்த கர்நாடக அணி கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் ‘ஏ’ பிரிவில் 2வது இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த பிரிவில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் ஏற்கெனவே 8 புள்ளிகளுடன் அரை இறுதியில் கால்பதித்து இருந்தது.

‘பி’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய ராணுவம் - இந்திய விமானப்படை அணிகள் மோதின. இதில் இந்திய ராணுவம் அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுமீத் பால் சிங் 3 கோல்களும் (3, 15 மற்றும் 49-வது நிமிடங்கள்), ஹர்மன் சிங் 2 கோல்களும் (21 மற்றும் 44-வது நிமிடங்கள்), மணீஷ் ராஜ்பர் ஒரு கோலும் (1-வது நிமிடம்) அடித்தனர்.

இந்திய ராணுவ அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் தனது பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. இதே பிரிவில் ஏற்கெனவே 9 புள்ளிகளுடன் பஞ்சாப் நேஷனல் வங்கி அரை இறுதியில் நுழைந்திருந்தது.

அரை இறுதி ஆட்டங்கள் நாளை (2-ம் தேதி) நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் - பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெறும் 2- வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய ராணுவம் - ஹாக்கி கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE