“விராட் கோலியின் அந்த இன்னிங்ஸ் பாகிஸ்தான் கண்முன் வந்து போகும்” - முகமது கைஃப்

By ஆர்.முத்துக்குமார்

ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமையன்று பல்லகிலே மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாபர் அசாம், இப்திகர் அகமது நேற்று சதமெடுத்தனர். வெற்றிக்குப் பிறகு பாபர் அசாம் கூறும்போது, “இந்தியாவுக்கு எதிராகவும் இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடுவேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், விராட் கோலியைக் கண்டு பாகிஸ்தான் பவுலர்கள் பயப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 23-ம் தேதி மெல்போர்னில் 90,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த போட்டியில் விறுவிறுப்பின் உச்சம் அடைந்த ஆட்டத்தில் விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 நாட் அவுட் என்று பாகிஸ்தானை ஆட்கொண்டார். ரசிகர்களின் நெஞ்சை விட்டு நீங்கா அந்த இன்னிங்ஸை முகமது கைஃப் இப்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு நினைவுப்படுத்துகிறார்.

அன்றைய தினம் ராகுல், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் என வரிசையாகக் காலியாகி இந்திய அணி 159 ரன்கள் இலக்கை எதிர் கொண்டு ஆடிய போது 31/4 என்று 6.1 ஓவர்களிலேயே தோல்வி முகம் காட்டியது. ஆனால், விரட்டல் மன்னன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா (40) அடுத்த 13 ஓவர்களில் 113 ரன்களை விளாசி 20வது ஓவரில் ஸ்கோரை 144 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நவாஸ் வீசிய ஓவரில் ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 1 ரன் எடுக்க, கோலி அடுத்த பந்தில் 2 ரன்களை எடுத்தார்.

ஆனால் நவாஸ் அடுத்த பந்தை ஃபுல்டாசாக வீச நோ-பாலுடன் பந்து டீப் ஸ்கொயர்லெக்கில் கோலி சிக்ஸ் விளாசினார். டீப் ஸ்கொயர் லெக் பீல்டர் எம்பி பந்தைக் கையால் தொட இந்திய ரசிகர்களின் கை அவர்களின் நெஞ்சுக்குச் சென்றது, ஆனால் பந்து சிக்ஸ். அது இடுப்புக்கும் மேல் வரவில்லை என்று நடுவருடன் பாபர் அசாம் வாதிட்டார் ஒரே டென்ஷன் மயம். 3 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் கோலி அடிக்கக் கூடாது என்பதற்காக தள்ளி வீச நினைத்து நவாஸ் வைடு பந்தை வீசினார்.

அடுத்த பந்து ஃப்ரீ ஹிட், பந்தை கோலியும் விட்டார். விக்கெட் கீப்பரும் விட கார்த்திக்கும், கோலியும் 3 ரன்களை ஓடியே எடுத்து விட்டனர். அடுத்த பந்து தினேஷ் கார்த்திக் ஸ்டம்ப்டு ஆக, அஸ்வின் இறங்கினார். ஒரு பந்து ஒரு ரன் எடுத்தால் டை, 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பதற்றம் தரும் தருணம். அப்போதுதான் அஸ்வின் ஒரு அபாரமான புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார். அஸ்வின் லெக் திசையில் நகர்ந்து அடிக்கப் போவார் என்று நினைத்த நவாஸ் லெக் திசையிலேயே வீச அஸ்வின் வெளியே சென்ற பந்தை வேடிக்கைப் பார்க்க ஒரு ரன் வைடு வகையில் கிடைக்க ஸ்கோர் சமன் ஆனது. பிறகு கடைசி டென்ஷன் பந்தில் அஸ்வின் இந்த முறை ஒதுங்கிக் கொண்டு மிட் ஆஃபுக்கு மேல் கூலாக தூக்கி விட இந்தியா அபார வெற்றி பெற்றது கோலி 82 நாட் அவுட், மிகப்பெரிய இன்னிங்ஸ் அது!

பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் பலவீனமான மிடில் ஆர்டர் பற்றியும் ரோஹித்,கோலியை மட்டுமே நம்பியிருக்கின்றது என்றும் பல விமர்சனங்கள் வைத்து வரும் நிலையில், முகமது கைஃப் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில், “பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பை டி20-யில் கோலியின் ஆட்டம் பிரமாதம். பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும் என்றால் விராட் கோலி உண்மையில் பிரமிக்கத்தக்க வகையில் ஆடுகிறார்.

முழு பொறுப்பையும் தன் மேல் எடுத்துக் கொண்டு சேசிங்கில் மாஸ்டராகத் திகழ்கிறார். நிச்சயம் கோலியின் இந்த இன்னிங்ஸ் இன்னும் பாகிஸ்தான் வீரர்கள் மனக்கண்களில் வந்து போகவே செய்யும். குறிப்பாக பாகிஸ்தான் பவுலர்கள் கொஞ்சம் அச்சப்படவே செய்வார்கள். கோலியைக் கண்டு அஞ்சுவார்கள். அவரது விக்கெட் எத்தனை பெரிய விக்கெட் என்பதையும் அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

கோலியை வீழ்த்தி விட்டால் ஆட்டம் எளிதாகி விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், கோலி இருக்கும் பார்முக்கு நிச்சயம் பாகிஸ்தான் பவுலர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கவே செய்யும். கடந்த டி20 உலகக் கோப்பையிலிருந்தே பாகிஸ்தான் பவுலர்கள் எப்படி வீசுவார்கள் என்பதை கோலி நன்றாகப் புரிந்து வைத்திருப்பார். அது நசீம் ஷாவாக இருந்தாலும் ஷாஹின் அப்ரீடியாக இருந்தாலும் ராவுஃப் என்றாலும் கோலிக்குத் தெரியும் எப்படி ஆட வேண்டுமென்று. பாகிஸ்தானுக்கு எதிராக அவர்களின் அபாய வீரர் விராட் கோலிதான்” என்கிறார் முகமது கைஃப்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்