ஆசிய கோப்பை தொடர் | இலங்கை - வங்கதேசம் அணிகள் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

பல்லேகலே: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் இலங்கையின் பல்லேகலேவில் நடைபெறும் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. கடந்தடி 20 வடிவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை இலங்கை அணி வென்றிருந்தது. இம்முறை இலங்கை அணியில் முன்னணி வீரர்கள் காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் தொடர் தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர்தான் இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லகிரு குமரா,தில்ஷான் மதுஷங்கா ஆகியோர் காயங்களால் விலகி உள்ளனர். குஷால் பெரேரா,கரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடையாததால் அணியில் இடம் பெறவில்லை. இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டில் இலங்கை அணி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கணிசமான வெற்றிகளை குவிக்க தவறியது.

இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கிலும், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கிலும் இழந்தது. இருப்பினும் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. மேலும் ஐசிசி உலகக் கோப்பை தகுதி சுற்றிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பேட்டிங் பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, ஷாரித் அசலங்கா ஆகியோரை பெரிதும் சார்ந்து உள்ளது.

கேப்டன் தசன் ஷனகா, இந்தியாவுக்கு எதிரான தொடரில் மட்டுமே சதம் அடித்திருந்தார். இதைதவிர்த்து இந்த ஆண்டில் அவரிடம் இருந்து பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. உலகக் கோப்பை தொடர் நெருங்க உள்ள நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பார்முக்கு திரும்புவதில் தசன் ஷனகா தீவிரம் காட்டக்கூடும். பந்து வீச்சில் முன்னணி வீரர்கள் விலகி உள்ள நிலையில் மகேஷ் தீக் ஷனா, கசன் ரஜிதாஆகியோர் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

இலங்கை அணிக்கு ஒரே ஆறுதல் விஷயம் என்னவென்றால் வங்கதேச அணியும் முன்னணி வீரர்களின் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதுதான். நட்சத்திர பேட்ஸ்மேன் தமிம் இக்பால், வேகப்பந்து வீச்சாளர் எபாதத் ஹோசைன் ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் கலந்துகொள்ளவில்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் வைரஸ் காய்ச்சல் காரணமாக கடைசி நேரத்தில் விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக 30 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொதுவாக வங்கதேச அணி உள்நாட்டில் சிறப்பாக செயல்படும். ஆனால் இந்த ஆண்டில் சொந்த மண்ணில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்களை பறிகொடுத்தது. எனினும் அயர்லாந்துக்கு எதிரான தொடரை வென்று ஆறுதல் அடைந்தது. பேட்டிங், பந்து வீச்சில் தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் அணியில் உள்ளனர்.

கேப்டன் ஷகிப் அல்ஹசன், முஸ்பிகுர் ரகிம், நஜ்முல் ஷான்டோ ஆகியோர் இந்தஆண்டில் தலா 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இளம் பேட்ஸ்மேன் தவுஹித்ஹிர்டோய் 300 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். ஆனால் இந்த ரன்களில் ஒரு பகுதி அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டதாகும். பந்து வீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது பலம் சேர்க்கக்கூடும்.

இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இதே பிரிவில் ஆப்கானிஸ்தானும் உள்ளது. இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்களது அடுத்த ஆட்டங்களில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கின்றன. போட்டியின் தினத்தில் ஆப்கானிஸ்தான் கணிக்க முடியாத அணியாக செயல்படும் திறன் கொண்டது. இதனால் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்த இலங்கை, வங்கதேச அணிகள் போராடக்கூடும். இதற்கிடையே இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE