இந்திய அணி நாக்-அவுட் சுற்றில் அழுத்தத்தை கையாளும் வழியை கண்டறிய வேண்டும்: முன்னாள் பாக். வீரர்

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணி நாக்-அவுட் சுற்றில் நிலவும் அழுத்தத்தைக் கையாள்வதற்கான வழியை வகுக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அதன் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. பின்னர் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் பட்டம் வென்று 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி, 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி, 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, 2021 மற்றும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடி உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் நாக்-அவுட் சுற்று ஆட்டம் குறித்து முகமது ஹபீஸ் பேசியுள்ளார்.

“இந்தியா மிகச் சிறந்த அணி. ஐசிசி தொடர்கள் மற்றும் முக்கிய தொடர்களில் நாக்-அவுட் சுற்றில் நிலவும் அழுத்தத்தை அவர்களால் கையாள முடியவில்லை என்பதை நாம் அண்மைய காலமாக பார்த்து வருகிறோம். இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் அவர்களது செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் நாக்-அவுட் சுற்றில் அழுத்தத்தைக் கையாள ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

பும்ராவின் வருகை அவர்களுக்கு எந்த அளவுக்கு ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அடுத்தடுத்து வரும் தொடர்களில் நாம் பார்க்கலாம். அவர் எதிரணியை அச்சுறுத்தும் திறன் படைத்தவர். ஐசிசி தொடரை வெல்ல அவர்கள் கடின உழைப்பை செலுத்த வேண்டி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE