ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்: பாகிஸ்தான் - நேபாளம் மோதல்

By செய்திப்பிரிவு

முல்தான்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்துகொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், நேபாளம், இந்தியா ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல்இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 17-ம் தேதி கொழும்பு நகரில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும்.

வரும் அக்டோபர் 5-ம் தேதி 50ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு சிறந்த பயிற்சியாக ஆசிய கோப்பை தொடர் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. கடந்த முறை டி 20 வடிவில் நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடர் இம்முறை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இந்தியா பங்கேற்காத 3 லீக் ஆட்டங்கள் மற்றும் சூப்பர் 4 சுற்றின் ஒரு ஆட்டம் என மொத்தம் 4 போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படுகின்றன. இறுதிப் போட்டி உட்பட மீதம் உள்ள 9 ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ளன.

7 முறை சாம்பியனான இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் ஆசிய கோப்பை தொடரை சந்திக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள 17 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்தே உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணிதேர்வாகக்கூடும். இதனால் இளம் பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது மேம்பட்ட திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.

கே.எல்.ராகுல் இந்த தொடரில் நிபந்தனையுடன் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து அவர், குணமடைந்தாலும் அசவுகரியமாக உணர்வதால் போட்டிக்கான முழு உடற்தகுதியை இன்னும் எட்டவில்லை. இதனால் முதல் இரு ஆட்டங்களில் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் அறிவித்துள்ளார். வலை பயிற்சியில் கே.எல்.ராகுல் சிறப்பாக பேட் செய்தாலும் விக்கெட் கீப்பிங் செய்யும் போது சில இடர்பாடுகளை சந்திப்பதாக தெரிகிறது. இதனாலேயே அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் முதல் இரு ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்படுவதாக தெரிகிறது.

ஆசியக் கோப்பையின் போது கே.எல்.ராகுல் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவார், ஏனெனில் அணியில் அவரது இருப்பு மிடில் ஆர்டருக்கு உறுதியையும் நெகிழ்வுத்தன்மையையும் சேர்க்கிறது. இது ஒருபுறம் இருக்க ஸ்ரேயஸ்ஐயர், முழு உடற்தகுதியுடன் களமிறங்க ஆயத்தமாகி உள்ளார். முதுகுவலி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு குணமடைந்துள்ள அவர், பெங்களூரு பயிற்சி முகாமில் தீவிர பயிற்சிகள் கொண்டுள்ளார்.

ஆசிய கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக தேசிய அகடாமியில் ஸ்ரேயஸ் ஐயர், போட்டியை உருவகப்படுத்தி விளையாடுதல் போன்ற செயல்முறைகளில் விரிவான பயிற்சிகளை மேற்கொண்டார். எனினும் உண்மையான போட்டி சூழ்நிலையின் கடுமையான தன்மைக்கு ஸ்ரேயஸ் ஐயர் எவ்வாறு பதிலளிப்பார் என்பதை அறிய இந்திய அணி நிர்வாகம் ஆர்வமாக இருக்கக்கூடும்.

இதே நிலைதான் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கும் உள்ளது. இவர்கள் இருவரும் சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தனர். 11 மாதங்களுக்கு பிறகு திரும்பிய பும்ரா, அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணாவும் கவனம் ஈர்த்தார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டி 20 போட்டிகளில் இருந்து வேறுபட்டது. முழுமையாக 10 ஓவர்களை வீச வேண்டும். மேலும் 50 ஓவர்களில் களத்தில் பீல்டிங் செய்ய வேண்டும். இதனால் ஈரப்பதமான இலங்கை ஆடுகள சூழ்நிலைகளில் பும்ரா, பிரசித் கிருஷ்ணாவின் செயல்திறன் கவனிக்கத்தக்கதாக இருக்கும்.

ஆசிய கோப்பை தொடரில் முக்கியமான அணியாக இந்தியா திகழ்ந்தாலும் பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவான போட்டியாளர்களாகவே உள்ளனர்.

6 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ள இலங்கை அணியில் இம்முறை துஷ்மந்த சமீரா, வனிந்து ஹசரங்கா, லகிரு குமரா, தில்ஷான் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் அந்த அணி பந்து வீச்சு துறையில் தேக்கத்தை சந்திக்கக்கூடும். வங்கதேச அணியிலும் சில முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளனர். தமிம் இக்பால், எபாதத் ஹோசைன் ஆகியோர் ஆகியார் ஏற்கெனவே விலகி விட்டனர். ஷகிப் அல்ஹசன் 6 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிக்கு தலைமை வகிக்க உள்ளார். இதனால் அவர், மீதுஅதிக எதிர்பார்ப்பு உள்ளது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் நன்கு செட்டில் ஆன அணியாக திகழ்கிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக பாகிஸ்தான் அணி வென்றிருந்தது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேறி இருந்தது. இந்த உற்சாகத்துடன் ஆசிய கோப்பை தொடரை அணுகுகிறது பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி.

ஆப்கானிஸ்தான் அணி ஹஸ்மதுல்லா ஷாகிதி தலைமையில் களமிறங்குகிறது. போட்டியின் தினத்தில் எந்த அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சவால் அளிக்கக்கூடியவர்கள். இதனால் ஆசிய கோப்பை தொடரில் அந்த அணி மீது எதிர்பார்ப்பு உள்ளது.

தொடக்க நாளான இன்று பிற்பகல் 3 மணிக்கு முல்தான் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், நேபாளம் அணியுடன் மோதுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 2-ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இலங்கையின் பல்லேகலேவில் நடைபெறுகிறது. அடுத்த ஆட்டத்தில் 4-ம் தேதி நேபாளத்துடன் மோதுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்