‘யார் வெற்றி பெற்றிருந்தாலும் மகிழ்ச்சியே’: தங்க மகனின் தாய் சரோஜ் தேவி சொன்ன அசத்தல் பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகனின் வெற்றி குறித்த பேசிய நீரஜ் சோப்ராவின் தாய், "இது மகிழ்ச்சிக்குரிய தருணம். யார் வெற்றி பெற்றிருந்தாலும் மகிழ்ச்சியே" என்று கூறி அனைவரின் இதயங்களையும் கவர்ந்துள்ளார்.

இந்தியாவின் தங்கமகனான நீரஜ் சோப்ரா நட்சத்திர வீரராக மட்டுமில்லை, அனைவராலும் விரும்பப்படும் வீரராகவும் மாறியிருக்கிறார். உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின் இறுதியில் அவர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுடன் போட்டியிட வேண்டி இருந்தது. விளையாட்டு உலகில் எந்த வகையான போட்டி என்றாலும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என வரும்போது ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இந்தப் போட்டியிலும் அது இருந்தது. போட்டி முடிந்ததும், அர்ஷத் நதீம் தனக்கு விருப்பமான வீரர் என்றும், அவர் வெள்ளிப்பதக்கம் வென்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

2016-ல் நடைபெற்ற தெற்காசிய போட்டியிலும் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீமை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப்போதிருந்து, இருவரும் ஒரு டஜன் நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். எனினும் அனைத்துப் போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா வெற்றியுடன் திரும்பி உள்ளார். இதற்கு உலக தடகள சாம்பியன்ஷிப்பும் விதிவிலக்காக அமையவில்லை.

இதனிடையே, மகனின் வெற்றி குறித்து நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, அவரது மகன் பாகிஸ்தான் வீரரை அவரது மகன் வீழ்த்தியிருப்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு, வீரர்கள் எங்கிருந்து வந்தாலும் பரவாயில்லை என அவர் அளித்த பதில் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுள்ளது.

நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த நீரஜின் தாயார், "இங்கே பாருங்கள் அனைவரும் களத்துக்கு விளையாடுவதற்காகவே வந்துள்ளோம்.ஒருவர் இல்லையென்றால் மற்றொருவர் கட்டாயம் வெற்றி பெறுவார்கள். அதனால் வென்றவர் பாகிஸ்தானியரா, ஹரியாணாக்காரரா என்ற கேள்விக்கு இடமில்லை. இது கொண்டாட்டத்துக்குரிய விஷயம். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தாலும் அது அதிக மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்" என்று தெரிவித்திருந்தார்.

மனங்களை வென்ற மகன்: உலக தடகள சாம்பியன்ஷ்ப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நீரஜ் சோப்ரா படைத்ததும், ஹங்கேரிய ரசிகை ஒருவர் அவரிடம் வந்து இந்திய தேசியக் கொடியில் நீரஜின் ஆட்டோகிராஃப் வேண்டும் என்று கேட்டுள்ளார். தேசியக் கொடியில் கையெழுத்திட மறுத்த சோப்ரா, அந்த ரசிகையை ஏமாற்ற மனமில்லாமல் அவரது டிஷர்ட்டின் வலது கையில் கையெழுத்திட்டுள்ளார். களத்தில் கலக்கியிருந்த நீரஜ் சோப்ராவின் இந்த செயல், களத்துக்கு வெளியேயும் அவர் பல இதயங்களை வெல்வதற்கு வழி வகுத்தது குறிப்பிடத்தகக்து.

இப்போது நாம் பதக்கம் வெல்கிறோம்: போட்டி முடிந்ததும் ஊடகத்தினரிடம் உரையாடிய நீரஜ் சோப்ரா, நான் போட்டிக்கு முன் செல்போனை அதிகம் பயன்படுத்துவதில்லை. போட்டி முடிவடைந்து பார்க்கும்போது இந்தியா - பாகிஸ்தான் மோதல் என எல்லா இடங்களிலும் பார்த்தேன். நம் நாட்டில் எப்போதும் இந்த இந்தியா-பாகிஸ்தான் விஷயம்உள்ளது, அது போட்டிக்கு நல்லது, ஆனால் உலகளாவிய நிகழ்வுகளில் ஒவ்வொரு போட்டியாளரின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

நீங்கள் ஐரோப்பிய விளையாட்டு வீரர்களைப் பார்த்தால், அவர்கள் மிகவும் கடினமானவர்கள், அவர்கள் எந்த நேரத்திலும் எதையும் செய்ய முடியும். அர்ஷத் மட்டுமல்ல, ஜக்குப் வட்லெஜும் (செக் குடியரசின் வெண்கலம் வென்றவர்) சிறந்த வீரர். கடைசி வாய்ப்பு வரை ஒவ்வொரு வீரர் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

முன்பு ஐரோப்பியர்கள் அதிகளவில் ஈட்டி எறிதலில் சிறப்பாகச் செயல்பட்டனர், ஆனால் இப்போது நாங்கள் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு பதக்கம் வெல்வது நம் இரு நாடுகளுக்கும் நல்லது. மக்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது அழுத்தத்தை உருவாக்குவார்கள். ஆனால் எனது அணுகுமுறை ’எளிதாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் மற்றும் உங்களை நம்புங்கள்' என்று கூறினார்.

தங்க மகன்: உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதன் மூலம் அனைத்து வகையிலான பட்டங்களையும் வென்று தனது ஈட்டி எறிதல் வாழ்க்கையை முழுமை பெறச் செய்துள்ளார் நீரஜ்சோப்ரா. 2018-ல் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார். டைமண்ட் லீக் தொடரில் 2022 மற்றும்2023-ல் தலா 2 முறை பட்டம் வென்றார். கடந்த ஆண்டு டைமண்ட் லீக் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வாகை சூடினார். 2016-ல் ஜூனியர் உலக சாம்பியன், 2017-ல் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE