அரசு பள்ளி வளாகத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படுமா? - இன்று தேசிய விளையாட்டு தினம்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டி கிருஷ்ணநகரில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.7 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானமும், விளையாட்டு விடுதியும் கட்டப்பட்டது.

இது தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான ஒரே சிறப்பு விளையாட்டு விடுதியாகும். இந்த மைதானத்தில் ஆண்டுதோறும் கே.ஆர். அறக்கட்டளை சார்பில் இந்திய அளவிலான ஹாக்கி போட்டி, மாநில அளவிலான போட்டிகள் நடந்து வருகின்றன. மேலும், தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நடந்துள்ளன.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுகள் மேற்கொண்டு சுமார் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இதுவரை எந்த வித பணிகளும் தொடங்கவில்லை. இது ஹாக்கி வீரர்கள், ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலக ஹாக்கியின் தந்தை என்று அழைக்கப்பட்ட மேஜர் தயான் சந்த், இதே மைதானத்தில் 1952-ம் ஆண்டு நடந்த கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்று, வீரர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அரசு கொண்டாடி வருகிறது. எனவே, மேஜர் தயான் சந்த் நேரில் வந்து பயிற்சியளித்த அரசு பள்ளி மைதானத்தில் விரைவில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என வீரர்கள், ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் சி.குரு சித்ர சண்முக பாரதி கூறியதாவது: கோவில்பட்டியில் 1920-களில் தொடங்கிய ஹாக்கி விளையாட்டு நூற்றாண்டுகளை கடந்தும் தொடர்கிறது. கோவில்பட்டியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஹாக்கி விளையாடி வருகின்றனர்.

கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரி, தனியார் என 13 ஹாக்கி மைதானங்கள், 15 ஹாக்கி கிளப்கள் உள்ளன. கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் விடுதி மாணவர்கள் மட்டுமே பயிற்சி எடுக்க முடியும். இதர வீரர்களுக்கு அனுமதி கிடையாது. கேலோ இந்தியா திட்டம் என்பது கிராமத்தில் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பதுதான்.

அதனால், கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டால், இன்னும் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் ஹாக்கி விளையாட வருவார்கள்” என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE