உலக தடகள  சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தின் வாயிலாக உலகை திரும்பி பார்க்க வைத்த டிக்கெட் கலெக்டர் ராஜேஷ் ரமேஷ்

By பெ.மாரிமுத்து

ஹங்கேரியில் முடிவடைந்துள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 2:59.92 விநாடிகளில் கடந்து 5-வது இடம் பிடித்தது. பதக்கத்தை இழந்திருந்தாலும் இந்திய அணியினர் தகுதி சுற்றில் அசத்தி ஆசிய அளவில் புதிய சாதனையை படைத்திருந்தனர்.

இறுதி சுற்றுக்கு முந்தைய தகுதி சுற்றில் இந்திய அணி பந்தய தூரத்தை 2:59.05 விநாடிகளில் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தொடரில் ஜப்பான் அணி பந்தய தூரத்தை 2.59.51 விநாடிகளில் கடந்ததே ஆசிய அளவில் சாதனையாக இருந்தது. இதனை தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் ரமேஷை உள்ளடக்கிய இந்திய அணி முறியடித்து புதிய சாதனையை படைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்திய அணி சாதனையை நிகழ்த்த ராஜேஷ் ரமேஷின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஏனெனில் ஆங்க்ரலிக் எனப்படும் கடைசி கட்டத்தில் ஓடி வெற்றி இலக்கை எட்டும் இடத்தில் ராஜேஷ்ரமேஷ் ஓடினார். இந்திய வீரர்களின் செயல்திறனானது பார்வையாளர்களையும், போட்டியின் வர்ணனையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.ஏனெனில் இந்திய வீரர்கள் 4 பேரும் எப்போதும்ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்க வீரர்களுக்கு இணையாக போட்டியிட்டது ஒரு கணம் உலக தடகளத்தையே மெய்சிலிர்க்க வைத்தது.

இந்திய அணியில் இடம் பெற்ற ராஜேஷ் ரமேஷின் பயணம் சற்று நெகிழ்ச்சியானது. திருச்சி ரயில்நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றி வரும் ராஜேஷ் ரமேஷ் இளம் வயதிலேயே தடகளத்தில் தடம் பதித்தார். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்கோவையில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர்ஓட்டத்தில் பங்கேற்ற ராஜேஷ் ரமேஷ் வெண்கலப் பதக்கம் வென்றார். தொடர்ந்து மே மாதம்இலங்கையில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து 4-வது இடத்தைபிடித்தார். ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 4 X 400 ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய அணியில் ராஜேஷ் ரமேஷ் பங்கேற்றார். இந்த பந்தயத்தில் இந்தியா 6-வது இடம் பிடித்தது.

இதன் பின்னர் ஜூலை மாதம் பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சார்பில் பங்கேற்றார். இதன் பின்னர் கர்நாடகாவில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு தங்கம் வென்றார்.

2021-ம் ஆண்டு ஆகஸ்டில் லக்னோவில் நடைபெற்ற ரயில்வே தேர்வில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் கைப்பற்றினார். தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரலில் கேரளாவில் நடைபெற்ற தேசிய பெடரேஷன் கோப்பையில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். ஜூன் மாதம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் ஓட்டத்தில் 4-வது இடமும் தொடர் ஓட்டத்தில் தங்கமும் வென்றார்.

ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தொடர் ஓட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்றார். எனினும் இந்த தொடரில் ராஜேஷ் ரமேஷை உள்ளடக்கிய இந்திய அணி 2வதுசுற்றுக்கு தகுதிபெறத் தவறியது. தொடர்ந்து பர்மிங்காமில் நடைபெற்றகாமன் வெல்த் விளையாட்டு போட்டிக்கு தேர்வானார்.

ஆனால் காயம் காரணமாக அவர், விலக நேரிட்டது. இதன் பின்னர் காயத்தில் இருந்து குணமடைந்து கடந்த ஆண்டு அக்டோபரில் குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டில் பங்கேற்று 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.

காயங்கள், பணி அர்ப்பணிப்புகள் மற்றும் கரோனா தொற்று காலக்கட்டத்தில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக அவரது தடகள வாழ்க்கை சற்று பின்னடைவைச் சந்தித்தது. இதனால் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் ராஜேஷ் ரமேஷுக்கு தொலைவில் இருந்தது. 2020-ம் ஆண்டில், அவர் திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். எனினும் அவர், தடகளத்தின் மீதான தனது ஆர்வத்தை குறைத்துக்கொள்ளவில்லை.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான தோனி எப்படி டிக்கெட் கலெக்டராக தனது பயணத்தை தொடங்கி படிப்படியாக ஏற்றம் அடைந்தாரோ அதே போன்று ராஜேஷ் ரமேஷும் முன்னேற்றம் கண்டார். இதன் உச்சமாக ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து உலகளாவிய தடகளப் போட்டியில் தடம் பதித்து மைல்கல் சாதனையுடன் வரலாற்று பக்கத்தில் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் ராஞ்சியில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பையில் ராஜேஷ் ரமேஷ் அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். 400 மீட்டர் ஓட்டத்தில் அவர், பந்தய தூரத்தை 46.13விநாடிகளில் கடந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இது இந்திய தடகள சம்மேளனம், ஆசிய சாம்பியன்ஷிப் தகுதி சுற்றுக்கு நிர்ணயித்துள்ள 46.17 விநாடிகளைவிட கடந்திருந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ், தற்போதைய தேசிய சாதனையாளரும் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான முகமது அனஸ் யாஹியா ஆகியோரின் சாதனைகளை விஞ்சியதாக ராஜேஷ் ரமேஷின் சாதனை அமைந்திருந்தது. இந்தநம்பமுடியாத சாதனை அவரது அர்ப்பணிப்பு மற்றும் அவரது தடகள வாழ்க்கையை உயிர்த்தெழுப்ப அவர் முதலீடு செய்த கடின உழைப்புக்கு ஒரு சான்றாகவே பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டில் தோனி எட்டிய சாதனைகள் அளப்பரியவை. அவரது பாணியில் டிக்கெட் கலெக்டராக தடகளத்தில் தனதுதடத்தை வலுவாக பதித்துள்ள இந்த ‘மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்’ பயணிக்க வேண்டிய வேகமும், தொலைவும் இன்னும் அதிகம் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்