அசாமில் மேம்பாலத்தின் கீழ் அழகுற அமைக்கப்பட்ட பாட்மிண்டன் மைதானம்

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் மேம்பாலத்தின் கீழே வீரர், வீராங்கனைகள் பயிற்சிக்காக மிகவும் அழகான முறையில் பாட்மிண்டன் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்ஹட் மாவட்டத்தில் உள்ள நா-அலி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்துக்கு கீழே நீளமான இடம் காலியாக இருந்தது. இந்த இடத்தை பாட்மிண்டன் மைதானமாக மாற்றினால் வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவும் என்று எண்ணிய அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.பி.அகர்வாலா அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

இதையடுத்து ஜோர்ஹட் மாவட்டத்திலுள்ள பாட்மிண்டன் சங்கத்தை அணுகி அதற்கான அனுமதியைப் பெற்றார் அகர்வாலா. பின்னர் சங்கத்தின் உதவியோடு மேம்பாலத்தின் கீழ் மிகவும் அழகான வகையில் பாட்மிண்டன் மைதானத்தை அவர் அமைத்துள்ளார்.

இரு புறமும் வேலிகள் அமைத்து அந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. சுவரின் இரு புறங்களிலும், பிரபலமாக உள்ள பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் படங்கள் அழகுற வரையப்பட்டுள்ளன.

மேலும், வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுக் கட்டணம் மிகவும் குறைவாக நிர்ணயிக்க இருப்பதால், பாட்மிண்டன் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மைதானத்தை ஜோர்ஹட் மாவட்ட பாட்மிண்டன் சங்கம் பராமரிக்கும் என அசாம் மாநில பாட்மிண்டன் சங்க செயலாளர் திகான்டா புர்காகோஹைன் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் அகர்வாலா, தனது தந்தையின் நினைவாக இந்த மைதானத்தை அமைத்துத் தந்துள்ளார். கடந்த 16-ம் தேதி இந்த மைதானத்தை மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திறந்துவைத்தார். மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள இந்த மைதானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து திகான்டா புர்காகோஹைன் கூறும்போது, “இந்த திட்டம் மிகவும் வித்தியாசமான திட்டமாக அமைந்துள்ளது. இதனால் வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் மிகவும் பயன் அடைவர். இந்த வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மைதானத்தை சங்க உறுப்பினர்கள் மிகவும் குறைந்த கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் இதை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவுள்ளோம்.

இதுபோல், பல்வேறு இடங்களில் உள்ள மேம்பாலத்தின் கீழ் காலியாக உள்ள பகுதிகளை மற்ற சில விளையாட்டுகள் விளையாடவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE