ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீராங்கனைகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரத்தில் அந்நாட்டின் கால்பந்து சம்மேளனத் தலைவரை உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உலகக் கோப்பைக்கான மகளிர் கால்பந்து போட்டி கடந்த வாரம் நிறைவுற்றது. இதில் ஸ்பெயின் அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.

சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டிப் பிடித்து உதட்டில் முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அதேநேரத்தில், லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை பல்வேறு நாட்டு கால்பந்து சம்மேளனங்கள் தெரிவித்தன. இதையடுத்து அந்த சம்பவத்துக்கு லூயிஸ் ரூபியேல்ஸ் மன்னிப்புக் கோரினார்.

இந்நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகவேண்டும் என்று ஸ்பெயின் மகளிர் அணியினர் போர்க்கொடி தூக்கினர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் லூயிஸ் ரூபியேல்ஸை, பிபா அமைப்பு நேற்று 90 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பிபாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE