ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் போட்டி இன்று (வியாழன்) பெர்த்தில் தொடங்கியது, முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.
ஆட்ட முடிவில் டேவிட் மலான் 110 ரன்களுடனும், பேர்ஸ்டோ 75 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து 52 ஓவர்களில் 174 ரன்கள் கூட்டணியை இதுவரை அமைத்துள்ளனர். ஒரு நேரத்தில் இங்கிலாந்து 131/4 என்று சரிவு அபாயத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடிலெய்ட் முடிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இம்முறை டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பெர்த்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கும் மேல் எடுத்த தருணங்களில் தோல்வியடைந்ததில்லை என்பது புள்ளிவிவரம்.
அலிஸ்டர் குக் தனது 150-வது டெஸ்ட் போட்டியை நல்ல இன்னிங்ஸ் மூலம் கொண்டாட முடியவில்லை. 7ரன்களில் மிட்செல் ஸ்டார்க்கின் 149 கிமீ யார்க்கர் முயற்சி அதிவேக பந்தில் மட்டையை விரைவில் இறக்க முடியாமல் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ரிவியூ செய்யவில்லை, காரணம் அவருக்கே அவர் அவுட் என்று தெரிந்திருந்ததே.
இன்று அருமையாக ஆடிய ஸ்டோன்மேன், டேவிட் மலான் ஆகியோருக்கு ஆஸ்திரேலியா அணி ஸ்லிப் பீல்டர்கள் 2 நேரடி வாய்ப்புகளைத் தவற விட்டனர். முதலில் ஹேண்ட்ஸ்கம்ப் இடத்தில் தேர்வு செய்யப்பட்ட மிட்செல் மார்ஷ் முதல் ஸ்லிப்பில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் வந்த வாய்ப்பை தவற விட்டார், பிற்பாடு மலான் 92 ரன்களில் இருந்த போது 3-வது ஸ்லிப்பில் கேமரூன் பேங்கிராப்ட் ஒரு வாய்ப்பை தவற விட்டார். இம்முறை துரதிர்ஷ்டசாலி மிட்செல் ஸ்டார்க்.
குக் ஆட்டமிழந்தவுடன் ஸ்டோன்மேன், வின்ஸ் இணைந்தனர் பெர்த் பிட்சின் பவுன்ஸ், வேகத்துக்கு ஓவர் ஆர்வம் காட்டி ஷார்ட் பிட்ச் பந்து வீசாமல் புல் லெந்த் பந்துகளையே ஆஸி.யினர் வீசினர், ஆனால் ஸ்டோன்மேன், வின்ஸ் இருவரும் சில அபாரமான ட்ரைவ்களை ஆடி அசத்தினர். 63 ரன்களை இருவரும் சேர்த்து ஆஸி.க்கு லேசான மன உளைச்சலை உணவு இடைவேளை வரும் நேரம் அளித்த வின்ஸ், மலான் ஜோடி உணவு இடைவேளைக்குச் சற்றும் உன் உடைக்கப்பட்டது, 25 ரன்கள் எடுத்த வின்ஸ் அதுவரை காட்டிய பொறுமையை இழந்து ஜோஷ் ஹேசில்வுட் ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஜோ ரூட் அருமையான டச்சில் இருந்தார், ஜோஷ் ஹேசில்வுட் பந்தை அருமையான டிரைவ் பவுண்டரி அடித்து 23 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் என்று நல்ல மூடில் இருந்தார். கமின்ஸின் ஆபத்தில்லாத லெக் திசைப் பந்தை பிளிக் செய்ய முயன்று கிளவ்வில் பட்டு பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியது இங்கிலாந்து முகாமில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
முன்னதாக நேதன் லயனை ஸ்வீப் செய்தும், மிட்செல் ஸ்டார்க்கை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளையும் அடித்த ஸ்டோன்மேன் நெருக்கடி அதிகரிக்க ஹேசில்வுட் ஆக்ரோஷ பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார். அடுத்த பவுன்சர் பேட்டில் பட்டும் பாயிண்டில் நேதன் லயனுக்கு முன்னால் விழுந்தது, அவர் டைவ் அடித்தார் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் 56 ரன்களில் அவர் 10 பவுண்டரிகளை அடித்து ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் துல்லிய பவுன்சர் ஸ்டோன்மேன் தொண்டைக்குக் குறி வைக்கப்பட்டது. பந்து கிளவ்வைக் கடந்து சென்ற போது பட்டது போல் ஒலி எழ முறையீடும் எழுந்தது, கள நடுவர் இராஸ்மஸ் நாட் அவுட் என்றார், ஆனால் பெய்ன் மிக அருமையாக ஒரு கையில் தலைக்கு மேல் பிடித்ததை மறுக்க முடியாது. ஆஸ்திரேலியா ரிவியூ செய்தனர். பந்து கிளவ்வில் பட்ட போது வலது கை மட்டையின் தொடர்பில் இல்லை. ஒரு கையை அவர் எடுத்து விட்ட பிறகே கிளவ்வில் பட்டதாகத் தெரிந்தது. ஆனால் 3-ம் நடுவர் அலீம் தார் அதனை அவுட் என்று தீர்ப்பளித்தார். பிற்பாடு காட்டப்பட்ட கோணங்களில் பந்து முன் கை கிளவ்வில் பட்டதாகத் தெரிந்தாலும் அலீம் தார் அந்தக் கோணங்களைக் காட்டுமாறு கேட்கவில்லை. அதனால் அலீம் தார் அதனை எப்படி அவுட் கொடுத்தார் என்ற கேள்வி நிச்சயம் இங்கிலாந்து முகாமில் எழுந்திருக்கும்.
மலான் சதம்; பேர்ஸ்டோவுடன் சதக்கூட்டணி:
ஸ்டோன்மேன் விக்கெட்தான் இன்று கடைசி விக்கெட் என்பதை ஆஸ்திரேலியா எதிர்பார்க்கவில்லை, காரணம் பேர்ஸ்டோ, மலான் அபாரமாக ஆடினர், ஆக்ரோஷமாக ஆடினர். அனைத்திற்கும் மேலாக ஆஸி.க்கு எந்தக் காலத்திலும் பிடிக்காத ஆதிக்கம் செலுத்தினர். ஒவர் பிட்ச் செய்யும் போதெல்லாம் மலான் அருமையான கவர் டிரைவ்களை ஆடினார், அப்படிப்பட்ட ஒரு கவர் டிரைவ் மட்டையில் பட்டதும் பவுண்டரிக்குப் பறந்ததும் கேமராவினால் பிடிக்க முடியவில்லை, இதனை வர்ணணையாளர்கள் ‘இன்றைய தினத்தின் சிறந்த ஷாட்’ என்று வர்ணித்தனர்.
ஸ்டார்க் பந்தை ஹூக் செய்யும் போது டாப் எட்ஜ் ஆகி சென்ற சிக்ஸ் உட்பட மலான் 15 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று ஆக்ரோஷம் காட்டினார். ஹேசில்வுட் வீசிய பவுன்சரை புல்ஷாட் ஆடி டீப் ஸ்கொயர் லெக் பவுண்டரி மூலம் தன் சதத்தை எட்டினார் மலான். 159 பந்துகளில் பெர்த் பிட்சில் முதல் நாளில் சதம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல.
பேர்ஸ்டோவும் அருமையான லெக் திசை ஆட்டத்தின் மூலம் 10 பவுண்டரிகளை விளாசி 149 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இருவரும் இணைந்து 174 ரன்களைச் சேர்த்தனர். 2010-11 தொடருக்குப் பிறகு இங்கிலாந்தின் சிறந்த ரன் கூட்டணியாகும் இது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் ஒரு ஓவருக்கு 4.15 என்ற விகிதத்தில் ரன்களை விட்டுக் கொடுத்து 19 ஓவர்களில் 79 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 7 ஓவர்கள் வீசி 25 ரன்களுக்கு விக்கெட் இல்லை. ஹேசில்வுட், கமின்ஸ் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற, நேதன் லயன் 19 ஒவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago