உலகக் கோப்பை செஸ் | சாம்பியன் ஆனார் கார்ல்சன்; போராடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம்!

By செய்திப்பிரிவு

பாகு: உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா விளையாடினார். இரு கிளாசிக்கல் ஆட்டங்களை கொண்ட இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முதல் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்த நிலையில் 35-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்திருந்தது.

நேற்று (புதன்கிழமை) 2-வது ஆட்டத்தில் கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதினார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த நிலையில் 30-வது காய் நகர்த்தலின்போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் இரு ஆட்டங்களின் முடிவில் கார்ல்சன், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 1 புள்ளிகள் பெற்றனர். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இவர்கள் இருவரும் இன்று டை பிரேக்கர் ஆட்டத்தில் விளையாடினர்.

டைபிரேக்கர்: நேர கட்டுப்பாட்டுடன் ரேபிட் வடிவில் நடைபெற்ற டைபிரேக்கரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டு ஆட்டம் நடைபெற்றது. இதில் முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சவால் கொடுத்தார். இருந்தும் போராடிய அவரால் வெற்றி பெற முடியவில்லை. 2-வது ஆட்டம் டிரா ஆக உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை கார்ல்சன் வென்றார். இதன் மூலம் இந்தத் தொடரில் ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்தார். 3-வது இடத்தை ஃபேபியானோ கருனா பிடித்தார்.

உலக சாதனையாளர் பிரக்ஞானந்தா! - சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றாலும், தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செஸ் உலகக் கோப்பை போட்டியின் இளம் வயது இறுதிச்சுற்றுப் போட்டியாளர் என்கிற சரித்திரத்தைப் படைத்தார். இதற்கு முன்பு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உலகக் கோப்பையில் விளையாடி இருந்தாலும் இவ்வளவு குறைந்த வயதில் அந்த இடத்தை எட்டவில்லை.

சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா எத்தகைய சமூக பொருளாதார பின்புலமும் இன்றி தனது திறமையின் வழியாக மட்டுமே இவ்வளவு உயரத்தை அடைந்திருக்கிறார். செஸ் உலக மாமன்னன் மாக்னஸ் கார்ல்சனுடன் இறுதிச்சுற்றில் விளையாடிய பிரக்ஞானந்தா நாள்தோறும் குறைந்தபட்சம் 8 மணிநேரம் செஸ் விளையாடி பயிற்சி எடுப்பாராம்.

அதைவிட முக்கியமாக எவ்வளவு மன அழுத்தம் தரக்கூடிய ஆட்டத்தை எதிர்கொள்ளும்போதும் சலனமற்ற மனநிலையை தக்கவைத்துக் கொள்வாராம். துப்பறியும் சாம்புபோல எதிராளியின் பலவீனத்தை கச்சிதமாகக் கணக்கிடும் புத்திசாலித்தனம் கொண்டவர் என்று அவரது தேசிய பயிற்சியாளர் ஷ்யாம் சுந்தர் தெரிவித்திருக்கிறார். இதைவிட சுவாரசியமான ஒன்றை சென்னையில் பிரக்ஞானந்தாவுக்கு சிறப்புப் பயிற்சி அளித்துவரும் பிரபல செஸ் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் கூறியிருக்கிறார்.

அதாவது, உள்ளூர் போட்டியோ உலக போட்டியோ வெற்றி, தோல்வியைச் சமமாகப் பாவிக்கும் மனத்திடத்துடன் 6 வயது முதலே பிரக்ஞானந்தா காணப்படுவாராம். அதேபோல வெற்றிக்குக் குறிவைத்து ஆடாமல் ரசித்து மனமொன்றி விளையாடுவாராம். இதைத்தான் இலக்கைவிட பாதை முக்கியம் என்றனர் அறிஞர் பெருமக்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE