“அவரைவிட சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இல்லை” - ஹர்பஜன் சிங் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தேர்வுக்குழு சுழற்பந்து வீச்சாளர் சாஹலை தேர்வு செய்யாதது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்.

17 வீரர்கள் அடங்கிய ஆசிய கோப்பை தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவ வீரர்கள் அஸ்வின், சாஹலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்கு கேப்டன் ரோகித் விளக்கமளித்தார். “தற்போது 17 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடிந்ததால் யுவேந்திர சாஹல் வெளியே இருக்கிறார். அவரை நாங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றால் எங்களுக்கு உள்ள ஒரே வழி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை நீக்க வேண்டும்.

நாங்கள் அதை செய்ய முடியாது. ஏனெனில் அடுத்த இரு மாதங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் பெரிய அளவில் பங்கு வகிப்பார்கள். இவர்களில் சிலர், நீண்ட நாட்களுக்குப் பின்னர் அணிக்கு திரும்பி உள்ளனர். அதனால் அவர்கள் எந்த வகையிலான செயல்திறனை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.

யாருக்கும் கதவுகள் அடைக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் யாரும் அணிக்குள் வரலாம். யுவேந்திர சாஹல் உலகக் கோப்பை தொடருக்கு தேவை என நாங்கள் உணர்ந்தால், அவரை எப்படி அணிக்குள் கொண்டு வருவது என பார்ப்போம். அஸ்வின், வாஷிங்டன் சுந்தருக்கும் இதே நிலைதான்” என்றார்.

ஹர்பஜன் கருத்து: “அணியில் சாஹல் இல்லாதது ஏமாற்றம். வெள்ளைப் பந்து பார்மெட் கிரிக்கெட்டில் அவரை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர் யாரும் இந்திய அணியில் இல்லை என நான் கருதுகிறேன். அவர் கடைசியாக விளையாடி சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் அவர் ஒரு மோசமான பந்துவீச்சாளர் என நாம் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. அவர் ஒரு மேட்ச் வின்னர். இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு அவர் அவசியம் தேவை” என தனது யூடியூப் சேனலில் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE