அயர்லாந்துடன் கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

By செய்திப்பிரிவு

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும்.

ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது போட்டி டப்ளின் நகரில் இன்றுஇரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 2வது போட்டியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அதேவேளையில் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா வேகக்கூட்டணி தொடக்கத்திலேயே விக்கெட்கள் கைப்பற்றி அயர்லாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயும் இரு ஆட்டங்களிலும் கவனம் ஈர்த்தார்.

இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றுவதில் தீவிரம் காட்டக்கூடும். தொடரை ஏற்கெனவே கைப்பற்றி விட்டதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக அவேஷ் கான் அல்லது முகேஷ் குமார் களமிறங்கக்கூடும். ஏனெனில் கடந்த 7 ஆட்டங்களிலும் அர்ஷ்தீப் சிங் இறுதிக்கட்ட ஓவர்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா,சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷாபாஷ் அகமது ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. இவர்கள் களமிறங்கும் பட்சத்தில் சஞ்சு சாம்சன், ரவி பிஷ்னோய் ஆயோர் வெளியே அமரக்கூடும். அயர்லாந்து அணியை பொறுத்த வரையில் தொடரை இழந்துவிட்ட நிலையில் ஆறுதல் வெற்றி பெற போராடக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE