'தாயின் துணை தனிச்சிறப்பானது' - பிரக்ஞானந்தாவின் தாயைப் பாராட்டிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ்

By செய்திப்பிரிவு

பாகு: நடப்பு உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாயாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாயாருக்கும் வாழ்த்துகள். என் அம்மா எனது அத்தனை போட்டிகளிலும் என்னுடன் வந்திருக்கிறார் என்ற முறையில் சொல்கிறேன். தாயின் துணை மிகச் சிறப்பானது. சென்னையைச் சேர்ந்த இந்த இளைஞர் நியூயார்க் கவ்பாய்ஸ் இருவரை வீழ்த்தியுள்ளார். மிகச் சிக்கலான தருணங்களிலும் கூட பிரக்ஞானந்தா திடமாக இருந்துள்ளார்" என்று நெகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

யார் இந்த கேரி காஸ்பரோவ்?- இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்கு முன்பு, செஸ் உலகில் கொடிகட்டிப் பறந்தவரான ரஷ்ய வீரர் கேரி காஸ்பரோவ்.

அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற ஊரில் 1963-ம் ஆண்டு கேரி காஸ்பரோவ் பிறந்தார். சிறு வயதில் தனது பெற்றோர் சதுரங்க விளையாட்டில் ஈடுபடும்போது அதை வேடிக்கை பார்ப்பது காஸ்பரோவின் வழக்கம். அப்போது அவர்கள் சிக்கலான சூழ்நிலையில் இருக்கும்போது காஸ்பரோவ் ஆலோசனைகளைக் கூறுவாராம். இதைப் பார்த்த காஸ்பரோவின் பெற்றோர், அவர் மிகச்சிறந்த செஸ் வீரராக வருவார் என்று கணித்து, அருகில் உள்ள செஸ் அகாடமியில் சேர்த்துள்ளனர். 7 வயதில் தந்தை இறந்த பிறகு, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார் கேரி காஸ்பரோவ். 1976-ம் ஆண்டில் நடந்த சோவியத் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவ், பிறகு உள்ளூரில் புகழ்பெற்ற செஸ் வீரரான அலெக்ஸாண்டர் ஷகாரோவிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

1984-ம் ஆண்டில் 2,710 புள்ளிகளுடன் உலக செஸ் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 1985-ம் ஆண்டுமுதல் பலமுறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

சாதனை படைத்த பிரக்ஞானந்தா: உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விளையாடிய இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் இன்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியர் என்ற சாதனையை அவர் இதன் மூலம் படைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE