ஆசிய கோப்பை | ரோகித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு: திலக் வர்மாவுக்கு வாய்ப்பு!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழு. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இளம் இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்த காரணத்தால் இந்தத் தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்திய அணி பங்கேற்காத 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும். மீதம் உள்ள 9 ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்படும். இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் உள்ளன. மற்றொரு பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா இரு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணியை அகர்க்கர் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷூப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ் , ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் எதிர்பார்த்தது போலவே கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளனர். இஷான் கிஷன் இரண்டாவது விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்றுள்ளார். சஹலுக்கு மாற்றாக குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளார். அனைவரும் சொல்லி வந்தது போல இளம் வீரர் திலக் வர்மாவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் முழு உடற்தகுதியில் இல்லாத காரணத்தால் சஞ்சு சாம்சன் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல். இருந்தாலும் ஆடும் லெவனில் அவருக்கான இடம் குறித்த கேள்வி இப்போது எழுந்துள்ளது. அக்டோபரில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் ஆசிய கோப்பை தொடர் அதற்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE