பன்னாட்டு அலை சறுக்குப் போட்டி | ஜப்பான் வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: "சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு அலை சறுக்கு போட்டியில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாரா வகிடா மற்றும் டென்ஷி இவாமி ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு அலை சறுக்குப் போட்டியில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாரா வகிடா மற்றும் டென்ஷி இவாமி ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

உலக அலை சறுக்கு லீக் அமைப்பின் தொடரை முதன்முறையாக இந்தியாவில் நடத்திக் காட்டியுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெருமுயற்சியைப் பாராட்டுகிறேன். 44-ஆவது செஸ் ஒலிம்பியாட், WTA சென்னை ஓப்பன் மற்றும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களைத் தொடர்ந்து மேலும் ஒரு மகுடமாக இது அமைந்துள்ளது.

இதனால் நமது தமிழகம் பெருமிதம் கொள்கிறது. உலக அலை சறுக்கு வரைபடத்தில் தமிழகத்தை இடம்பெறச் செய்யும் முயற்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னகர்வு" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு அலை சறுக்கும் சங்கம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்புடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பன்னாட்டு அலை சறுக்கு லீக் போட்டிகள் கடந்த 14-ம் தேதி முதல் நடந்தது.

இதில், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 70 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் மகளிர் பிரிவில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாரா வகிடா மற்றும் டென்ஷி இவாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE