நவீன கால பிராட்மேனா ஸ்டீவ் ஸ்மித்?

By பெ.மாரிமுத்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியதில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் பங்கு அளப்பரியது. பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் அவர், ஒரு காவியமான இன்னிங்ஸை விளையாடி சதம் அடித்ததுடன் இங்கிலாந்து அணி வீரர்களால் கடைசி வரை வீழ்த்த முடியாத வீரராகவும் திகழ்ந்தார். பெர்த்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட்டில் 399 பந்துகளை சந்தித்து 239 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணியின் இதயத்தை உடைத்தெறிந்தார். ஆஷஸ் தொடரில் தனித்துவமான பேட்டிங்கால், அனைத்து கால சிறந்த பேட்ஸ்மேனான டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு புகழப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளார் ஸ்மித்.

ஆஷஸ் வெற்றி நாயகனான ஸ்மித் பேட்டிங்கில் ஏறக்குறைய இங்கிலாந்து அணியை ஒற்றை ஆளாக கையாண்டு ஜோ ரூட் குழுவினரை வீழ்ச்சியடைய செய்துள்ளார் என்றே கூறவேண்டும். 3 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் ஸ்மித், 4 இன்னிங்ஸ்களில் 142 சராசரியுடன் 426 ரன்களை வேட்டையாடி உள்ளார். 28 வயதான அவர், பேட்டிங்கில் தனக்கே உரிய பாணியை கடைபிடித்து வருகிறார். பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்டெம்புகளை விட்டு நகர்ந்து சென்று, பல்வேறு அசைவுகளை மேற்கொண்டபடி பேட் செய்யும் ஸ்மித் இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62.32 என்ற விகிதத்தில் ரன்குவிப்பு சராசரியை வைத்துள்ளார்.

இதுதான் கிரிக்கெட் வரலாற்றில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஸ்மித்தை நிலைகொள்ள செய்துள்ளது. 1928 முதல் 1948-ம் ஆண்டு வரை விளையாடிய பிராட்மேனின் சராசரி 99.94. 2010-ம் ஆண்டு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பேட்டிங் வரிசையில் 8-வது வீரராகத்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார் ஸ்மித். ஆனால் 7 ஆண்டுகளில் அவரது வளர்ச்சி விஸ்வரூபம் கண்டுள்ளது. டெஸ்ட்டில் தொடர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளில் அதிக சராசரியுடன் ஆயிரம் ரன்களுக்கு மேல் வேட்டையாடி உள்ளார்.

டெஸ்ட்டில் ஸ்மித் 22 சதங்கள் அடித்துள்ளார். இதில் 14 சதங்கள் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு வந்தவை. அதிலும் இவை 29 ஆட்டங்களில் அடிக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. பிராட்மேன் கேப்டனாக செயலாற்றிய காலக்கட்டத்தில் 24 போட்டிகளில் 14 சதங்கள் எடுத்திருந்தார். ஆஷஸ் தொடரில் இரட்டை சதம் அடித்த ஆஸ்திரேலிய கேப்டன்களில் ஸ்மித், 5-வது நபர். இந்த வகையில் பிராட்மேன் இருமுறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

பெர்த் டெஸ்ட்டில் ஸ்மித் ஏறக்குறைய 3 நாட்கள் பேட் செய்தார், அவரது தனித்தன்மை வாய்ந்த பேட்டிங்கும் இம்முறை ஆஷஸ் தொடர் ஒருதரப்பாக அமைய முக்கிய காரணங்களுள் ஒன்று. இதுதான் இங்கிலாந்து அணியிடம் இருந்து ஆஸ்திரேலியாவை பெரிய அளவில் வேறுபடுத்திக் காட்டியது. இந்தத் தொடரில் வழக்கத்துக்கு மாறான பேட்டிங் நுட்பங்களை ஸ்மித் கையாண்டதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், கையாண்ட சில பேட்டிங் நுட்பங்கள், டான் பிராட்மேன் பயன்படுத்திய நுணுக்கங்களுடன் ஒன்றிய வகையில் இருந்தது.

பிராட்மேன் மட்டையை தாழ்வாகவே சுழற்றுவார். அதே வகையிலான நுட்பத்தை ஸ்மித்தும் மேற்கொண்டார். காற்றில் பறந்து செல்லும் வகையிலான ஷாட்களை ஸ்மித் அரிதாக விளையாடுவார். அதேபோல் பந்துகளை கட் செய்வதிலும் குறைந்த அளவிலான ரிஸ்க்கையே எடுப்பார். இதுபோன்ற யுத்திகளால் அவருக்கு எதிராக களவியூகங்களை அமைப்பதில் எதிரணியினர் பலமுறை திக்குமுக்காடவும் செய்துள்ளனர். ஆஷஸ் டெஸ்ட் தொடரை உள்நாட்டில் ஒளிபரப்பும் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று, ஸ்மித் பேட்டிங்கின் போது ஒரு பந்து வீச்சாளரை சந்திப்பதற்கு முன்பு 23 வகையான உடல் அசைவுகளை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

ஸ்மித் மட்டையை கையாளும் விதம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறும்போது, “ஸ்மித் மட்டையை கையில் பிடிக்கும் விதம் குறித்து இளம் கிரிக்கெட் வீரருக்கு நாம் பயிற்சி கொடுக்க முடியாது. கையின் கீழ் பகுதி மூலம் அவர் மட்டையை வலுவாக கையாள்கிறார். ஆனால் அவரது பேட், பந்தை எதிர்கொள்ள கீழே இறங்கும் போது முழுமையாக பந்தை சந்திக்கிறது. இதில் அவரது கண்களும் கையும் ஒருங்கிணைந்து தனித்துவமாக செயல்படுகிறது” என்றார்.

அதீத பார்மில் இருக்கும் ஸ்மித், ஆஷஸ் தொடரின் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணியை மேலும் ஒரு கை பார்க்காமல் விடமாட்டார் என்றே கருதப்படுகிறது. தொடரை ஏற்கெனவே கைப்பற்றி விட்டதால் எந்தவித அழுத்தமும் இல்லாமல் அவர் எளிதாக ரன்கள் குவிக்க முடியும். இந்த வாய்ப்பை ஸ்மித் சரியாக பயன்படுத்தக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்