டப்ளின்: இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு டப்ளின் நகரில் உள்ள மலாஹைடில் நடைபெறுகிறது.
ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் இளம் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் டப்ளின் நகரில் உள்ள மலாஹைடில் இன்று இரவு நடைபெறுகிறது. அடுத்த தலைமுறை வீரர்களாக கருதப்படும் ஐபிஎல் நட்சத்திரங்களான ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா உள்ளிட்டோருடன் இந்திய அணி நிரம்பி உள்ளது.
எனினும் அனைவரது பார்வையும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா மீதுதான் உள்ளது. 29 வயதான அவர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 11 மாதங்களுக்குப் பிறகு களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற தொடரின் போது பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், காயத்தில் இருந்து முற்றிலும் குணமடைந்து தற்போது முழு பலத்துடன் பந்து வீச ஆயத்தமாகி உள்ளார்.
வரும் அக்டோபர் 5-ம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அதற்கு முழு அளவில் தயாராகும் விதமாகவே அயர்லாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாட உள்ளார் பும்ரா. 5 நாட்கள் இடைவெளியில் நடைபெறும் 3 ஆட்டங்களில் பும்ரா அதிகபட்சமாக 12 ஓவர்களை வீசக்கூடும். இதன் மூலம் அவரது உடற்தகுதி சர்வதேச போட்டிகளுக்கு தகுந்தவாறு அமைந்துள்ளதா என்பதை தேர்வுக்குழுவினரும், இந்திய அணி நிர்வாகமும் சோதித்து பார்த்துக்கொள்ளும்.
இதற்கிடையே டப்ளின் நகரில் பும்ரா வலை பயிற்சி செய்யும் காட்சிகளை பிசிசிஐ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வலது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக பும்ரா பவுன்ஸர்கள் வீசுகிறார். மேலும் இடது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக கால்களை குறிவைத்து வீசும் யார்க்கர், ஸ்டெம்பை பதம் பார்க்கிறது. இது பும்ரா, மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவதற்கு தயாராக இருப்பதை உணர்த்துவதாகவே கருதப்படுகிறது.
எனினும் போட்டியின் சூழ்நிலை என்பது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி நிர்வாகம், பும்ரா விஷயத்தில் அவசரம் காட்டியது. இதற்கான பலனை அனுபவித்தது. அவசர கதியால் தனது 7 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் முதன்முறையாக 11 மாதங்கள் போட்டிகளை தவறவிட்டார் பும்ரா.
இதன் காரணமாக தற்போது இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் காயத்தில் அவசரம் காட்டாமல் அவர்கள், முழுமையாக குணமடைவதற்கு போதிய கால அவகாசம் கொடுத்து வருகிறது. புத்துணர்ச்சியுடன் திரும்பி உள்ள பும்ராவுக்கு அயர்லாந்து தொடர் உடற்தகுதியை நிருபிக்க சிறந்த வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வரும் 30-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகவும் உதவும்.
பும்ரா, சஞ்சு சாம்சனை தவிர அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் அடுத்த மாதம் சீனாவில் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் களமிறங்க உள்ளனர். இதனால் இவர்கள் அயர்லாந்து தொடரை சிறந்த வகையில் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும். இந்த தொடரில் சஞ்சு சாம்சனின் திறன் பரிசோதிக்கப்படக்கூடும்.
ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுவரிசையில் ஷிவம் துபே அதிரடியில் பலம் சேர்க்கக்கூடும். காயத்தில் இருந்து மீண்டுள்ள மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் பெங்களூருவை சேர்ந்த அவர், ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்படக்கூடும் என கருதப்படுகிறது.
ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் டோக்ரெல் போன்ற நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களைக் கொண்ட ஆண்ட்ரூ பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி, இதுவரை இந்தியாவுக்கு எதிரானடி 20 போட்டியில் வெற்றி பெற்றதில்லை. எனினும் அந்த அணி டி 20 போட்டிகளில் தரமான அணியாகவே திகழ்கிறது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஐபில் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார். இந்திய அணியில் உள்ள பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர், பந்து வீசி உள்ளார். எனவே அவர், இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களுக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அணிகள் விவரம்
இந்தியா: ஜஸ்பிரீத் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், பிரஷித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்.
அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ராஸ் அடேர், மார்க் அடேர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், பியோன் ஹேண்ட், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, பென் ஒயிட், கிரேக் யங், தியோ வான் வெர்கோம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago