இங்கிலாந்து ஏமாற்றம்: ஸ்டார்க், ஹேசில்வுட்டிடம் சரண்; 233 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி

By ஆர்.முத்துக்குமார்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறப் போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து 5-ம் நாளான இன்று ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத்துக்குச் சரணடைந்து 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவ, ஆஸ்திரேலியா 2-0 என்று ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் முன்னிலை பெற்றது.

உண்மையில் இன்று ஆஸ்திரேலியாதான் பதற்றத்தில் களமிறங்கியது. ஒன்று ரிவியூ மீதமில்லை, இன்னொன்று ஜோ ரூட் க்ரீசில் அரைசதம் எடுத்து நின்றது. ஹேசில்வுட் இதனை ஒப்புக் கொண்டார், “அணியாகவும் சில தனிப்பட்ட வீரர்களிடத்திலும் பதற்றம் காணப்பட்டது உண்மை” என்றார்.

பேர்ஸ்டோ மிக அருமையாக ஸ்டார்க் பந்தை கவர் திசையில் ஒரு விளாசு விளாச பந்து பவுண்டரிக்குத் தெறித்தது, ஜேம்ஸ் ஆண்டர்சனை வைத்துக் கொண்டு கொஞ்சம் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க்கின் அடுத்த பந்தை தடுத்தாட முற்பட்டார், போதிய அவகாசம் கிடைக்கவில்லை, பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்ய ஆஸ்திரேலியா 120 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

மிட்செல் ஸ்டார்க் 19.2 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் 88 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் லயன் 2 விக்கெட்டுகளையும், கமின்ஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்று 178 ரன்கள் எடுத்தால் சாதனை வெற்றி என்ற நிலையில் களமிறங்கினர் ஜோ ரூட் மற்றும் கிறிஸ் வோக்ஸ். மொத்தம் 57 ரன்களையே சேர்த்து 6 விக்கெட்டுகளையும் இழந்து சரணடைந்தனர்.

ஜோ ரூட் முதலில் டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்து அவர்களை 442 ரன்கள் அடிக்கவிட்டது தவறு. பிறகு தவறான ஷாட்கள் அடங்கிய இன்னிங்சில் 227 ரன்களுக்குச் சுருண்டது, நேதன் லயனை இறங்கி வந்து ஆடாமல் கிரீசிலிருந்தபடியே ஆட முயற்சிப்பது ஆஸ்திரேலியாவுக்கு நிகரான உடல் மொழியில்லாதது, ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்து வீச்சுக்காகவாவது இன்னும் அதிகமாகப் போராடி 353 ரன்களுக்கு அருகிலாவது வர வேண்டும் என்ற உறுதியும் உத்வேகமும் இல்லாதது என்று இங்கிலாந்தின் பிரதிகூலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்று காலை வந்தவுடனேயே ஸ்கோர் 1 ரன் கூட ஏறாத நிலையில் கிறிஸ் வோக்ஸ் 2-வது பந்திலேயே ஹேசில்வுட் ஓவரில் மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில் ஒரு ரிவியூவையும் விரயம் செய்து விட்டுச் சென்றார்.

ஹேசில்வுட் மீண்டும் அடுத்த ஓவரை வீச இந்த முறை ஜோ ரூட் மட்டை விளிம்பை கனகச்சிதமாகப் பிடித்தார், நேற்றைய ஸ்கோரான 67 ரன்களிலேயே ஜோ ரூட் வெளியேறினார். சற்றே உள்ளே வந்த ஹேசில்வுட் பந்து நின்று சற்றே தாழ்வாக வந்தது ஜோ ரூட் மட்டையின் கீழ்ப்பகுதி விளிம்பில் பட்டு பெய்னிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கொஞ்சம் தாமதமாக மட்டையைக் கொண்டு வந்தார். அனைத்து எதிர்பார்ப்புகளும் 2 ஓவர்களில் சரிந்தது.

அதன் பிறகு மற்றதெல்லாம் சம்பிரதாயமே. மொயின் அலி 2 ரன்களில் ’அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது’ என்ற கவனமில்லாமல் லயன் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி. ஆனார். புதிய பந்தில் ஸ்டார்க் புகுந்தார், முதல் பந்திலேயே கிரெய்க் ஓவர்டனுக்கு ஒரு பந்தை உள்ளே செலுத்த கால்காப்பு, எல்.பி. 7 ரன்களில் ஓவர்டன் அவுட். பிராட் இறங்கினார், கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறைக்குள் இறக்கி விட்டது போல் குதித்துக் குதித்து ஓவர் பிட்ச் பந்துகளையும் பின்னால் சென்று ஆடிக் கொண்டிருந்தார், பவுன்சரை எதிர்பார்த்த பயத்தினால் விளைந்த பின்னோக்கிய நகர்வாகும் அது, முற்றிலும் தன்னம்பிக்கை இழந்த ஒரு பேட்டிங், 8 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். ‘நான் எப்போதும் உங்கள் விக்கெட், எப்போது வேண்டுமானாலும் என்னை அவுட் செய்யலாம்’ என்ற ரக பேட்டிங்கை வெளிப்படுத்தினார் பிராட்.

ஜானி பேர்ஸ்டோ 36 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சனை வைத்துக் கொண்டு ஏதாவது கொஞ்சம் போராடிப்பார்ப்பார், அல்லது 4,5 ஷாட்களையாவது ஆடி ஆஸ்திரேலியாவுக்குக் கொஞ்சமாவது தலைவலி கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒர் ஆக்ரோஷ பவுண்டரிக்கு அடுத்த பந்தே மட்டையில் பட்டு பவுல்டு ஆனார்.

அடுத்த டெஸ்ட் போட்டி பெர்த்தில். அங்கும் டாஸ் வென்று ஜோ ரூட் பீல்டிங்கைத் தேர்வு செய்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆட்ட நாயகனாக ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவும் தங்கள் பேட்டிங் பற்றி கவலைப்பட நேரிட்டுள்ளது, 200ரன்களுக்கும் மேல் முன்னிலை வைத்துக் கொண்டு 2-வது இன்னிங்சில் வார்னர் உட்பட அனைவரும் பம்மியது ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் இங்கிலாந்துக்கு முழு ஏமாற்றம் தரும் மதியமாக இது அமைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்