“பணத்துக்காக அல்-ஹிலால் அணியில் இணையவில்லை” - நெய்மர் விளக்கம்

By செய்திப்பிரிவு

பிரேசிலியா: கால்பந்தாட்ட உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மர். தற்போது அவர் சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல்-ஹிலால் அணியில் இணைந்துள்ளார்.

31 வயதான நெய்மர், பிரேசில் அணிக்காக சர்வதேச அரங்கில் விளையாடி வருகிறார். பிரேசில் அணிக்காக 77 கோல்களை பதிவு செய்துள்ளார். பல்வேறு கிளப் அணிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 257 கோல்களை கிளப் அளவில் பதிவு செய்துள்ளார். தற்போது அல்-ஹிலால் கிளப் அணியில் விளையாட சுமார் 98.24 மில்லியன் டாலர்களுக்கு அவர் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல். இந்நிலையில், அந்த அணியில் தான் இணைவதற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார்.

நெய்மர், தனது பால்யத்தில் போர்ச்சுகீசிய சாண்டிஸ்டா கிளப் அணிக்காக விளையாடினார். தொடர்ந்து 2003 முதல் 2009 வரை சான்டோஸ் இளையோருக்கான அணியில் விளையாடினார். 2009 முதல் 2013 வரை சான்டோஸ் சீனியர் அணியில் விளையாடினார். 2013 முதல் 2017 வரை பார்சிலோனா அணியிலும், 2017 முதல் 2023 வரை பிரான்ஸ் நாட்டில் பிஎஸ்ஜி அணியிலும் விளையாடினார். தற்போது அல்-ஹிலால் அணியில் இணைந்துள்ளார்.

“நான் ஐரோப்பாவில் அதிகம் விளையாடி சாதித்துள்ளேன். ஆனால், புதியதொரு இடத்தில் இருக்கும் சவால் மற்றும் வாய்ப்பை நான் எப்படி சமாளிக்கிறேன் என்பதை சோதித்து பார்க்க விரும்பினேன். விளையாட்டில் புதிய வரலாற்றை படைக்க விரும்புகிறேன். தற்போதைய சூழலில் சவுதி புரோ லீக் தொடரில் தரமான வீரர்கள் விளையாடி வருகின்றனர். பிரேசில் நாட்டு வீரர்களும் சவுதி கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார்கள். அதனால் நானும் இதில் விளையாட வேண்டுமென்ற ஆர்வத்தை பெற்றேன். பணத்துக்காக இந்த அணியில் இணையவில்லை” என நெய்மர் தெரிவித்துள்ளார்.

2025-ல் உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) நடத்தும் உலகக் கோப்பை கிளப் கால்பந்துப் போட்டியில் அல்-ஹிலால் அணிக்காக நெய்மர் விளையாடுவார். இந்தப் போட்டி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள பிரபல கால்பந்து கிளப்களில் உலகின் முன்னணி கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானா ரொனால்டோ (போர்ச்சுக்கல்), கரீம் பென்செமா (பிரான்ஸ்) ஆகியோர் இணைந்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது நெய்மரும் சேர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE