உலகக் கோப்பை மகளிர் கால்பந்து | இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

ஆக்லாந்து: உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் அணி முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தியது.

உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் அரை இறுதிப் போட்டி நியூஸிலாந்தின் ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான பலப்பரீட்சையில் ஸ்வீடன், ஸ்பெயின் அணிகள் களமிறங்கின.

ஆரம்பம் முதலே இரு அணி வீராங்கனைகளும் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். ஆனால், ஸ்பெயின் அணி வீராங்கனைகள் அடித்த பந்துகள் கோல் வலைக்கு வெளியே சென்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதைப் போலவே ஸ்வீடன் வீராங்கனைகள் கோல் வலையை நோக்கி அடித்த பந்துகளை ஸ்பெயின் கோல்கீப்பர் அபாரமாக தடுத்தார். முதல் அரை இறுதியில் எந்த அணியும் கோலடிக்கவில்லை.

இதையடுத்து 2-வது அரை இறுதியில் கோலடிக்கும் முயற்சியில் இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கு 81-வது நிமிடத்தில் நல்ல பலன் கிடைத்தது. ஸ்பெயின் வீராங்கனை சல்மா செலஸ்டே பேரல்லுலோ அயின்கோனோ, அற்புதமாக ஒரு கோலடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதற்கடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்வீடன் அணி ஒரு கோலடித்து சமன் செய்தது. 88-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ரெபேக்கா பிளாம்குவிஸ்ட் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்ததால் கூடுதல் நேரம், பெனால்டி ஷூட்-அவுட், சடன் டெத் வரை சென்றுவிடுமோ என்ற ரசிகர்கள் பரபரப்பில் இருந்தனர். ஆனால் 89-வது நிமிடத்திலேயே தனக்குக் கிடைத்த வாய்ப்பை கோலாக்கினார் ஸ்பெயின் வீராங்கனை ஒல்கா கர்மோனா. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை பெற்றது. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே ஸ்பெயின் வெற்றி பெற்று உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

2 அணிகள் இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்துக்கான போட்டி வரும் 19-ம் தேதியும், இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இறுதிப் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்க இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE