அயர்லாந்துடன் டி20 தொடர்: பும்ரா தலைமையில் புறப்பட்டது இந்திய அணி

By செய்திப்பிரிவு

மும்பை: அயர்லாந்து அணியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று புறப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவித போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை போட்டிகளை தவறவிட்டார்.

இதைத் தொடர்ந்து பும்ராவுக்கு நியூஸிலாந்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் அவர் கடந்த ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை. கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா இடம் பெறவில்லை.

இந்நிலையில் அவர் உடல்நிலை தேறியதையடுத்து அயர்லாந்தில் நடைபெறவுள்ள டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்குக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, நேற்று ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் அயர்லாந்து நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது.

பும்ரா தலைமையில் இந்திய அணியினர் புறப்பட்டுச் சென்ற புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அயர்லாந்தில் வரும் 18-ம் தேதி முதல் டி20 போட்டி டப்ளினில் நடைபெறவுள்ளது. 2-வது போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 23-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்திய அணி விவரம்: ஜஸ்பிரீத் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷாபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ்குமார், அவேஷ் கான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE