ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்: அதிகாலை 5.30 மணிக்கு பிரிஸ்பனில் நடக்கிறது

By பெ.மாரிமுத்து

ஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் தொடங்குகிறது.

புதிய தோற்றத்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி வேகப் பந்து வீச்சை பிரதானமாக நம்பி உள்ளது. 2013-2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியை எப்படி வேகப் பந்து வீச்சால் சிதைத்ததோ அதே பாணியை கையில் எடுக்க ஆயத்தமாகி உள்ளது.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய வீரர்கள் தேர்வு பலரது புருவத்தை உயர்த்த செய்த நிலையில், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரது அனல் பறக்கும் வேகப் பந்து வீச்சு கூட்டணி வெற்றியை தேடித்தரும் என அணி நிர்வாகம் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது.

இங்கிலாந்து அணி சோதனைக்கு உட்படாத பேட்டிங் வரிசையுடன், ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணி 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரை 3-2 என வென்றிருந்தது.

ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது அணியின் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தத் தொடருக்கு கடந்த சில மாதங்களாகவே ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணி ஒரு மாதத்துக்கு முன்பே பயிற்சி போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா வந்துவிட்டது. அந்த அணி வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் கால் வைத்ததுமே வார்த்தை போர்கள் தொடங்கி விட்டன.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் போட்டி போரிடுவது போன்றது என வர்ணித்தார். இதைத் தொடர்ந்து மேலும் பல வீரர்கள், 4 வருடங்களுக்கு முன்பு மிட்செல் ஜான்சன் எப்படி தனது அனல் பறக்கும் வேகத்தால் இங்கிலாந்து அணியை விழச் செய்தாரோ அதேபோல் இம்முறையும் நிகழ்த்தப்படும் என வார்த்தைகளை அள்ளி வீசினர்.

2013-2014-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன், மூர்க்கத்தனமாக வகையில் பந்து வீசி காபா டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்களை வேட்டையாடினார். இதனால் இங்கிலாந்து அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இந்தத் தொடர் முழுவதுமே ஜான்சன் தனது ஆக்ரோஷமான பந்து வீச்சால், இங்கிலாந்து வீரர்களை மிரளச் செய்தார். இதன் விளைவாக ஆஸ்திரேலிய அணி 5-0 என இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

இம்முறை மிட்செல் ஸ்டார்க்குடன், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசல்வுட் கை கோர்த்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் இதற்கு முன்னர் இவர்கள் 3 பேரும் ஒருசேர இணைந்து பந்து வீசியது இல்லை. ஆனால் இதற்கு முன்னர் இருந்த வேகக்கூட்டணியை விட இவர்கள் அபாயகரமான வகையில் செயல்படக்கூடியவர்கள் என்ற வாதம் ஆஸ்திரேலியர்களால் முன்வைக்கப்படுகிறது.

போட்டி நடைபெறும் காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 1988 முதல் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி கண்டது இல்லை. அதேவேளையில் இங்கிலாந்து இந்த மைதானத்தில் 31 ஆண்டுகளில் ஒரு வெற்றியை கூட பெறமுடியாமல் தவித்து வருகிறது.

இம்முறை இங்கிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களான அலாஸ்டர் குக் மற்றும் கேப்டன் ஜோ ரூட் ஆகியோரை விரைவாக வீழ்த்துவதை இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சளார்கள் செயல்படக்கூடும். இதுதொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறும்போது, “டாப் ஆர்டரில் குக், ஜோ ரூட் தான் முக்கியமானவர்கள். அவர்கள் உள்நாட்டிலும், வெளி இடங்களிலும் சிறப்பாக விளையாடி உள்ளனர்.

இவர்கள் இருவர் மீதுதான் எங்களது கவனம் அதிகம் இருக்கும். விரைவிலேயே அவர்களை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கக் செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் பிறகு அனுபவம் இல்லாத பேட்டிங் வரிசைக்கு மேலும் சிக்கல் கொடுக்கலாம். 4 வருடங்களுக்கு முன்பு காபாவில் வெற்றி தேடிக் கொடுத்த ஜான்சனின் பந்து வீச்சை வீடியோவில் பார்த்துள்ளோம். அனைவருக்கும் இது அதிகமான உந்துதலை கொடுத்துள்ளது.

அந்த ஆட்டத்தின் சிறப்பம்சங்களை வீடியோவில் பார்க்கும் போது நம்பமுடியாத வகையில் உள்ளது. ஜான்சன் எவ்வளவு அருமையாக பந்து வீசியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் சிலரின் கண்களில் பயத்தை பார்க்க முடிந்தது. எப்போதும் பேட்ஸ்மேன் தடுமாறுவதை பார்ப்பது ஒரு பந்து வீச்சாளருக்கு சிறந்த விஷயம், அதிலும் குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள்” என்றார்.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை பெரிதும் சார்ந்துள்ளது. சொந்த மண்ணில் எப்போதுமே இவர்கள் சிறப்பாக மட்டையை சுழற்றக்கூடியவர்கள். இதனால் இவர்களிடம் இருந்து வழக்கம் போல் சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். வார்னருடன் தொடக்க வீரராக கேமருன் பான்ஃகிராப்ட் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள இவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

உஷ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ் கம்ப், ஷான் மார்ஷ், டிம் பெயின் ஆகியோர் நடுக்கள பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடும். இவர்களில் ஷான் மார்ஷ், டிம் பெயின் ஆகியோரது தேர்வுதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனேனில் விக்கெட் கீப்பரான டிம் பெயின் 7 வருடங்களுக்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் ஷான் மார்ஷ் தற்போது 8-வது முறையாக அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு, ஜேக் பால் ஆகியோர் தயாராக உள்ளனர். இவர்களுடன் கிறிஸ்வோக்ஸ், மொயின் அலி ஆகியோரும் பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடும். பேட்டிங்கில் அலாஸ்டர் குக், ஜோ ரூட், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் மட்டுமே அனுபவம் கொண்டவர்கள். நடுக்கள வீரர்களான டேவிட் மலான், மார்க் ஸ்டோன் மேன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோருக்கு கடும் சவால் காத்திருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் கிறிஸ் வோக்ஸ் உள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் முதன்முறையாக ஆஷஸ் தொடரில் அணியை வழிநடத்த உள்ளனர். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஸ்மித் முதலிடத்திலும், ஜோ ரூட் 2-வது இடத்திலும் உள்ளனர். பேட்டிங்கில் ஸ்மித்துக்கு வார்னர் உதவியாக இருப்பது போல் ஜோ ரூட்டுக்கு அலாஸ்டர் குக் இருந்து வருகிறார்.

இரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க தடுமாறினால் அது அணியின் திறனை வெகுவாக பாதிக்கும். மேலும் கேப்டன்களுக்கு பெரிய அழுத்தத்தையும் உருவாக்கும். ஜோ ரூட்டை விட 2 வயது மூத்தவரான ஸ்மித், கேப்டன் பொறுப்பில் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை அவர், 26 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி உள்ளார். அதேவேளையில் ஜோ ரூட் இந்த சீசனில் தான் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். உள்நாட்டில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றிய நிலையில் முதன்முறையாக அயல்நாட்டு தொடரில் அதிலும் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடரில் அணிக்கு தலைமை தாங்குகிறார்.

விளையாடும் லெவன் விவரம்

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், பான்ஃகிராப்ட், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், ஷான் மார்ஷ், டிம் பெயின், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹசல்வுட், நாதன் லயன்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), அலாஸ்டர் குக், மொயின் அலி, டேவிட் மலான், மார்க் ஸ்டோன் மேன், ஜானி பேர்ஸ்டோவ், கிறிஸ்வோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேக்பால், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்