வலி தாங்கும் உள்ளம் | பூரன் உடலை பதம் பார்த்த பந்து; பிராண்டன் கிங், அர்ஷ்தீப் சிங்குக்கு நன்றி சொல்லி பதிவு

By செய்திப்பிரிவு

லாடர்ஹில்: 5-வது டி20 போட்டியில் விளையாடியபோது சக அணி வீரர் பிராண்டன் கிங் மற்றும் இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங் ஆகியோரால் தனது உடலை தாக்கிய பந்தால் ஏற்பட்ட காயத்தின் படத்தை பகிர்ந்துள்ளார் மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் நிகோலஸ் பூரன்.

இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 3-2 என்ற கணக்கில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றது. இந்தப் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்றது. 5 டி20 போட்டிகளிலும் விளையாடிய பூரன், மொத்தமாக 176 ரன்களை சேர்த்தார். அதன் மூலம் தொடர் நாயகன் விருதை அவர் வென்றார். 5-வது டி20 போட்டியில் 35 பந்துகளில் 47 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார்.

இந்த சூழலில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். “ஆட்டத்துக்கு பிறகான விளைவு. பிராண்டன் கிங் மற்றும் அர்ஷ்தீப் சிங்குக்கு நன்றி” என அதில் தெரிவித்துள்ளார். அதோடு இணைக்கப்பட்டுள்ள படத்தில் தனது கை மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தை குறிப்பிடும் வகையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த காயத்தினால் பந்து பட்ட இடத்தில் அவருக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது.

அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து ஒன்று அவரது வயிற்றுப் பகுதியில் தாக்கியது. அதனால் அவருக்கு அங்கு காயம் ஏற்பட்டது. அதேபோல நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த போது பிராண்டன் கிங் அடித்த ஸ்ட்ரைட் ஷாட் ஒன்று அவரது கையை தாக்கி இருந்தது. பிராண்டன் கிங் உடன் 107 ரன்களுக்கு அவர் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். 166 ரன்கள் என்ற இலக்கை மேற்கு இந்தியத் தீவுகள் அணி விரட்ட இந்தக் கூட்டணி உதவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE