மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: நாளை முதல் அரை இறுதியில் ஸ்வீடன் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

ஆக்லாந்து: பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஸ்வீடன், ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் இரண்டு கால் இறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி ஸ்வீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் நேற்று முன்தினம் 2 கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் போட்டி நேரத்தில் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்-அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 7-6 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - கொலம்பியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் முதல் அரை இறுதிப் போட்டி நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரிலுள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. இதில் ஸ்பெயின்- ஸ்வீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 16-ம் தேதி புதன்கிழமை நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

3-வது மற்றும் 4-வது இடத்துக்கான போட்டி சனிக்கிழமையும் (19-ம் தேதி), இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமையும் (20-ம் தேதி) நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE