“என் பெயர் இல்லாதது அதிர்ச்சி” - ஆசிய போட்டிக்கான அணி தேர்வு குறித்து தவான்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தான் தேர்வாகாதது குறித்து ஷிகர் தவான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

37 வயதான ஷிகர் தவான், கடந்த 2010 முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 10,867 ரன்கள் எடுத்துள்ளார். ஐசிசி தொடர்களில் இவரது செயல்பாடு அபாரமாக இருக்கும். அழுத்தம் நிறைந்த போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவர். இடது கை பேட்ஸ்மேனான இவர் தொடக்க ஆட்டக்காரர்.

கடந்த ஆண்டு மட்டும் 22 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அணியின் மாற்று கேப்டனாக செயல்படும் திறன் கொண்டவர். கடைசியாக கடந்த டிசம்பரில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.

“அணியில் என் பெயர் இல்லாததை பார்த்து சற்றே அதிர்ச்சியடைந்தேன். ஆனால், அவர்கள் வித்தியாசமான செயல்முறையை கையில் எடுத்துள்ளார்கள் என நான் அறிந்து, அதை ஏற்றுக் கொண்டேன். ருதுராஜ் கெய்க்வாட், அணியை கேப்டனாக வழிநடத்துவதில் எனக்கு மகிழ்ச்சி. அனைத்து இளம் வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளார்கள். அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நான் நம்புகிறேன்” என தவான் தெரிவித்துள்ளார்.

ஆசிய போட்டிக்கான இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்) ஆகியோர் உள்ளனர். யஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE