சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு இந்தியா - ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் அரை இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றன. அரை இறுதி ஆட்டங்கள் இன்று (11-ம் தேதி) நடைபெறுகின்றன.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் 4 வெற்றி, ஒரு டிராவுடன் 13 புள்ளிகள் குவித்து அரை இறுதி சுற்றில் கால்பதித்திருந்தது. முதல் ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, 2-வது ஆட்டத்தை ஜப்பானுக்கு எதிராக 1-1 என டிரா செய்திருந்தது.
3-வது ஆட்டத்தில் மலேசியாவை 5-0 என்ற கோல் கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென் கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கிலும், கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி இருந்தது ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி. உலகத் தரவரிசையில் இந்திய அணி 4-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் ஜப்பான் அணி 19-வது இடத்தில் உள்ளது.
தரவரிசை மற்றும் தற்போதைய செயல்திறனின் அடிப்படையில் இந்திய அணி இந்தத் தொடரில் மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்தக்கூடும். இருப்பினும் லீக் சுற்றில் இந்திய அணி வீழ்த்த முடியாத அணியாக ஜப்பான் திகழ்ந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஜப்பான் அணி 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது.
அந்த தொடரின் லீக் சுற்றில் ஜப்பான் 0-6 என்ற கோல் கணக்கில் இந்திய அணியிடம் தோல்வி கண்டிருந்தது. ஆனால் அரை இறுதி ஆட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட செயல்திறனை வெளிப்படுத்தி பட்டம் வெல்லும் இந்திய அணியின் கனவை தகர்த்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியினர் கவனமுடன் செயல்படக்கூடும்.
தற்போதைய தொடரில் இந்திய அணி 20 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனினும் ஜப்பான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு கிடைத்த 15 பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஒன்றில் மட்டுமே கோல் அடிக்கப்பட்டது.
இந்த விஷயத்தில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியினர் தீவிர முனைப்புடன் செயல்பட்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றுவதற்கான வழிகளை கண்டறியக்கூடும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி4 கால் பகுதியிலும் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி இருந்தது. அதேபோன்ற வகையிலான திறனை பிரதிபலிக்க செய்வதில் இந்திய அணியினர் ஆர்வம் காட்டக்கூடும்.
லீக் சுற்றை 4-வது இடத்துடன் நிறைவு செய்த ஜப்பான் அணி, சீனாவுக்கு எதிராக மட்டுமே வெற்றி கண்டது. 2 ஆட்டங்களை டிராசெய்த அந்த அணி, 2 ஆட்டங்களில் தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான், ஜப்பான்அணிகள் லீக் சுற்றின் முடிவில் தலா 5 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் ஜப்பான் அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஜப்பான் அணியின் கோல் வித்தியாசம் -2 ஆக இருந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கோல் வித்தியாசம் -5 ஆக இருந்தது. ஜப்பான் அணியின் அட்டாக்கிங் வரிசை ஏமாற்றம் அளித்தாலும், அந்த அணியின் டிபன்ஸ் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. லீக் சுற்றில் பெனால்டி கார்னரில் இந்திய அணியை, அந்த அணி வீரர்கள் கையாண்ட விதம் கவனம் ஈர்த்தது. இன்றைய ஆட்டத்திலும் ஜப்பான் அணியின் டிபன்ஸ், இந்தியாவுக்கு சவால் அளிக்கக்கூடும்.
மலேசியா - தென் கொரியா: முன்னதாக மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் லீக் சுற்றில் 12 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்த மலேசியா, 3-வது இடம் பிடித்த நடப்பு சாம்பியன் தென் கொரியாவுடன் மோதுகிறது. மலேசியா அணி லீக் சுற்றில் தோல்வியை சந்திக்கவில்லை. 4 வெற்றி, ஒரு டிராவை அந்த அணி பதிவு செய்திருந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் மலேசிய அணி, தென் கொரியாவை வீழ்த்தியிருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் தென் கொரியா பதிலடி கொடுக்க முயற்சி செய்யக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago