ஆஷஸ் தொடர்: வின்ஸ், ஸ்டோன்மேன் அபாரம்; இங்கிலாந்து 196/4

By ஆர்.முத்துக்குமார்

 

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி வியாழனன்று தொடங்கி முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் மார்க் ஸ்டோன்மேன் (53), ஜேம்ஸ் வின்ஸ் (83) ஆகியோர் சிறப்பாக ஆடி 2-வது விக்கெட்டுக்காக 125 ரன்கள் சேர்த்தனர்.

ஜோ ரூட் டாஸில் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால் பந்துகள் பிட்சில் நின்று வந்தன, பவுன்ஸும் பெரிய அளவுக்கு இல்லை, பேட்டிங் ஆட்டக்களம் போல்தான் இதுவரை தெரிகிறது. ஒருவேளை வெயிலில் ஈரப்பதம் காய்ந்தால் பந்துகள் எகிற வாய்ப்புள்ளது, அப்படி எகிறினாலும் பேட்டிங்கும் நன்றாக ஆட முடியும் என்றே தெரிகிறது.

ஆஸ்திரேலியா தங்களது வேகப்பந்து வீச்சை ஊதிப்பெருக்கிய அளவுக்கு அச்சுறுத்தல் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் நேதன் லயன் அச்சுறுத்தலாக வீசினார், ஒரு காலத்தில் பிரிஸ்பன் பிட்சில் ஸ்பின்னர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை முனை மாற்றுவதற்காக சேஞ்ச் பவுலராகவே கொண்டு வரப்படுவார்கள். அலிஸ்டர் குக், சமீபகாலங்களில் கிரீசிற்குள் நின்ற படியே கையாளும் முறையைக் கடைபிடிப்பதால் விரைவில் ஆட்டமிழப்பது தொடர்கிறது.

மிட்செல் ஸ்டார்க் அவருக்கு ஓவர் த விக்கெட்டில் பந்துகளை நல்ல வேகத்தில் உள்ளே கொண்டு வந்து கொண்டேயிருந்தார், பிறகு ஒரு பந்தை வெளியே எடுத்துச் சென்றார், முன் கால் நகராமல் கிரீசில் தேங்க வெளியே ஸ்விங் ஆன பந்துக்கு மட்டையைத் தொங்க விட்டார், எட்ஜ் ஆனது பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் கேட்ச் எடுத்தார்.

அதன் பிறகு ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறியது, ‘யாரேன்றே தெரியவில்லை’ என்று ஹெய்டனால் கேலி செய்யப்பட்ட மார்க் ஸ்டோன்மென், ஜேம்ஸ் வின்ஸ் அபாரமான தடுப்பாட்ட உத்தியைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை வெறுப்பேற்றினர். ஜோஷ் ஹேசில்வுட் எதிர்பார்ப்புக்கு இணங்க வீசாததால் அவரை உடனடியாக விலக்கிய ஸ்மித், கமின்ஸை பந்து வீச அழைக்க நேரிட்டது.

உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 59/1 என்று திருப்திகரமான நிலையில் இருந்தது. பிறகு மழையால் ஆட்டம் 90 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. திரும்பி வந்த போது இங்கிலாந்தின் ஸ்டோன்மென், வின்ஸ் ஆதிக்கம் செலுத்தினர், குறிப்பாக வின்ஸ், பேக்புட் பஞ்ச் மற்றும் முன்னால் வந்து டிரைவ் என்று சற்றே சுதந்திரமாக ஆடத் தொடங்கினார்.

ஜேம்ஸ் வின்ஸ் 106 பந்துகளில் அரைசதம் கண்டார். தேநீர் இடைவேளையை நோக்கி ஆட்டம் சென்று கொண்டிருந்த போது நேதன் லயன் ரவுண்ட் த விக்கெட்டில் அபாரமாக வீசினார், அதில் ஒரு பந்து மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி மேலும் நேராகச் செல்ல வின்ஸ் மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பெய்னிடம் சென்றது, பெய்ன் அதனை நழுவ விட்டார், கிளவ்வில் உட்கார்ந்த கேட்ச் அது. கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் டிம் பெய்ன் ஒரு கேட்சையும் விட்டது கேப்டன் ஸ்மித்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. அதோடு மட்டுமில்லாமல் மிட்செல் ஸ்டார்க் ஓவரில் ஒரு அபாரமான நேர் டிரைவ் மற்றும் ஒரு லெக் திசை பவுண்டரியையும் வின்ஸ் அடிக்க ஸ்மித்தின் வெறுப்பும் ரசிகர்களின் வெறுப்பும் பெய்ன் மீது பாய்ந்தன.

ஸ்டோன்மென் இவரைத் தொடர்ந்து தன் அரைசதத்தை எடுத்தார். 159 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்த இவர் பாட் கமின்ஸ் வீசிய அருமையான, வேகமான ரிவர்ஸ் ஸ்விங் பந்தில் ஸ்டம்புகளை இழந்தார். தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 128/2. வின்ஸ் 72 ரன்கள் எடுத்திருந்தார், ரூட் 1 ரன்னுடன் இருந்தார்.

வின்ஸ் 12 பவுண்டரிகளுடன் 170 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் போக்குக்கு எதிராக நேதன் லயன் செய்த அற்புதமான பீல்டிங் மற்றும் நேர் த்ரோவினால் வின்ஸ் ரன் அவுட் ஆனார். பந்தை கவர் திசையில் அடித்து விட்டு ஒரு ரன்னை விரைவாக எடுக்க நினைத்தார், ஆனால் எச்சரிக்கையுடன் இருந்த லயன் ஓடி வந்து பந்தை எடுத்த கையோடு ஓட்டத்துடனேயே ரன்னர் முனை ஸ்டம்பில் பந்தை அடித்தார், ஓரிரு அடிகள் வின்ஸ் பின் தங்கினார், ரன் அவுட்.

ஜோ ரூட் அருமையான தடுப்பாட்ட உத்தியை வெளிப்படுத்தினார், கிரீஸிலேயே தேங்காமல் முன்னங்காலை நன்றாக நீட்டி பந்தை தடுத்தாடவோ, விடவோ செய்தார், மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர் லெந்த் பந்தை மிக அருமையாக மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தார். 50 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்திருந்த போது, கமின்ஸ் பந்தை லெக் திசையில் ஆடப்பார்த்தார், பந்து மட்டையில் சிக்கவில்லை, கால்காப்பில் பட்டது நடுவர் இராஸ்மஸ் நாட் அவுட் என்றார், ஆனால் ஸ்மித் ரிவியூ செய்ய அவுட் உறுதியானது. ஆஸி.க்கு மிகப்பெரிய விக்கெட்.

மொயின் அலி இறங்கி நேதன் லயனை முழங்காலை மடக்கிக் கொண்டு ஆஷஸ் தொடரின் முதல் சிக்சரை அடித்தார். டேவிட் மலான் சில பவுண்டரிகளை விளாசி தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், அவர் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்களுடனும், மொயின் அலி 1 சிக்சருடன் 13 ரன்களுடனும் களத்தில் இருந்த போது, ஆஸி. அணி புதிய பந்தை எடுத்து 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது, முன்னதாக மலான் ஒரு எல்.பி.முறையீட்டில் தப்பினார். ஆஸ்திரேலிய ரிவியூ தோல்வியில் முடிந்தது.

இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள். ஆஸி.அணியில் பேட் கமின்ஸ் 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள், ஸ்டார்க் ஒரு விக்கெட். நேதன் லயன் மிக அருமையாக வீசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்