மன்ரோ அதிரடி சதம்; டிரெண்ட் போல்ட் பந்து வீச்சில் இந்திய அணிக்கு நியூஸி. பதிலடி!

By ஆர்.முத்துக்குமார்

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்திய அணியை நியூஸிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமநிலை எய்தியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி மன்ரோவின் 58 பந்து 109 அதிரடி ரன்களால் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்கள் எடுக்க, இலக்கை விரட்டிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது.

196 ரன்கள் கூட டி20 கிரிக்கெட்டில் பாதுகாப்பான ரன்கள் இல்லைதான். ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோரை டிரெண்ட் போல்ட் ஒரே ஓவரில் வீழ்த்தினார். 4 விக்கெட்டுகளை போல்ட் கைப்பற்றினார். ஷிகர் தவண் பந்தை மிட் ஆன் மேல் தூக்கி அடிக்கப் பார்த்தார் ஆனால் திரும்பிப்பார்க்கும் போது மிடில் ஸ்டம்ப் இல்லை.

விராட் கோலி அவர் எடுத்த 65 ரன்களைத் தாண்டியும் மிகச்சிறப்பாகத் திகழ்ந்தார். அவருக்கு உறுதுணையாக அடித்து ஆட ஆளில்லை. பெரும்பாலும் தோனியுடனேயே அவர் ஆடினார். தோனியினால் ஒருகட்டத்தில் அடிக்க முடியவில்லை 37 பந்துகளில் 49 ரன்கள் தோனி எடுத்தார் இன்று ஸ்கோர்கார்டைப் பார்த்து ஒருவர் அவர் முயற்சி செய்தார் என்று கூறலாம், ஆனால் முதலில் ஓவருக்கு 14-15 ரன்கள் தேவைப்படும் இடத்தில் அவரோ பந்துக்கு 1 ரன் என்ற விகிதத்தில் தடுமாறினார். 27 பந்துகளில் 27 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது.

இருமுனைகளிலும் வெளுத்து வாங்க வேண்டிய நேரத்தில் தோனி சுணங்கினார். இடது கை ஸ்பின்னர் மிட்செல் ஸாண்ட்னரும், இஷ் சோதியும் தோனியைக் கட்டிப்போட்டனர், லெக் ஸ்டம்ப் லைனில் அவரது பேடிற்கு வீசி அவர் ஆட்டத்தை அஷ்டகோணலாக்கினர். ஸ்பின்னர்களை பவுண்டரி அடிக்கத் திணறிய தோனியை சமீபகாலங்களில் பார்த்து வருகிறோம். இவரது அடிக்க முடியாமையினால் கோலிக்கு இன்னொரு முனையில் நெருக்கடி அதிகரித்தது.

சூழ்நிலை அடுத்தடுத்து பெரிய ஷாட்களைக் கோரும் போது தோனியினால் அடிக்க முடியவில்லை என்பதே எதார்த்தமான உண்மை. அடிக்கும் முயற்சியில் அவரிடம் புதிய ஷாட்கள் எதுவும் இல்லை. டி20 வடிவத்தில் இன்னமும் சரவெடி வெடிக்கும் பேட்ஸ்மென்கள் தேவை, தோனிக்குப் பதிலாக டி20 கிரிக்கெட்டில் வேறு புதிய வீரரை முயற்சி செய்ய அணித்தேர்வாளர்கள் முடிவெடுப்பது நலம்.

கொலின் மன்ரோ அதிரடி:

கொலின் மன்ரோ இந்த ஆண்டில் 2-வது டி20 சதம் எடுத்தார். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 2 சதங்கள் கண்ட ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மன்ரோ. 58 பந்துகளில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் விளாசலுடன் 109 ரன்கள் எடுத்தார்.

36 ரன்களில் இருந்த போது புவனேஷ்வர் குமார் டீப் மிட்விக்கெட்டில் கடினமான வாய்ப்பு ஒன்றைத் தவறவிட்டார். அவர் சாமர்த்தியமாக கேட்ச் பிடிக்க முயலாமல் சிக்ஸை தடுக்க முயன்றிருக்கலாம், அதே போல் ஷ்ரேயஸ் ஐயர் லாங் ஆனில் ஒரு பந்தை சிக்ஸுக்குத் தள்ளி விட நேர்ந்தது. ரோஹித் சர்மாவின் மோசமான த்ரோ ஒன்று மன்ரோவை ரன் அவுட்டிலிருந்து காப்பாற்றியது. 79 ரன்களில் மன்ரோ இருந்த போது சாஹல் கவர் திசையில் ஒரு கேட்சை விட்டார்.

இவற்றையெல்லாம் பயன்படுத்தாத வீரர் உண்டா? அதைத்தான் செய்தார் மன்ரோ. லெக் ஸ்டம்பில் ஒதுங்கி நின்று கொண்டு வெளுத்தார். டீப் மிட்விக்கெட் லாங் ஆனில் சிக்சர்கள் பறந்தன. ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் மொகமத் சிராஜை ஆஃப் திசையில் பஞ்ச் பவுண்டரி அடித்தார், இதனையடுத்து சிராஜ் வேகம் குறைந்த கட்டர்களை வீச மன்ரோ நின்று நிதானித்து 2 சிக்சரக்ளை விளாசினார். மார்டின் கப்தில் முதலில் 22 பந்துகளில் 14 ரன்களை எடுத்தார் பிறகு ஸ்பின்னர்கள் வந்தவுடன் 19 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். புவனேஷ்வர், பும்ரா அருமையாக வீசினர். சாஹல் திறமையாக வீசினார். ஆனாலும் மார்டின் கப்தில் இடது காலை இடப்புறம் ஒதுக்கிக் கொண்டு சாஹலை சிக்ஸ், நான்கு, சிக்ஸ் அடித்தார். அதில் ஒன்று கப்திலுக்குப் பிடித்த நேர் சிக்ஸ். பிறகு இன்னொரு சிக்சரையும் சாஹலை கப்தில் ஸ்லாக் ஸ்வீப்பில் அடித்தார். 41 பந்துகளில் 45 ரன்களில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்த மார்டின் கப்தில் சாஹல் லெக் பிரேக் பந்தை திரும்பும் திசைக்கு எதிர்த்திசையில் அடிக்க முயன்று பாண்டியாவிடம் கேட்ச் ஆனார். 11.1 ஓவர்களில் நியூஸிலாந்து 105/1 என்று அதிரடி தொடக்கம் கண்டது.

கேன் வில்லியம்சன் 12 ரன்களில் சிராஜ் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். 26 பந்துகளில் அரைசதம் கண்ட மன்ரோ மேலும் 50 ரன்களை 28 பந்துகளில் விளாசினார். அக்சர் படேலை 2 சிக்சர்கள் அடித்தார். பாண்டியா ஒரு ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார். மன்ரோவை வீழ்த்த முடியவில்லை 58 பந்துகளில் 109 நாட் அவுட். 20 ஓவர்களில் 196/2 என்று நியூஸிலாந்து 200 ரன்களுக்கு அருகில் வந்தது.

போல்ட் அபாரம்! தோனி மந்தம்; இந்தியா தோல்வி!

முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது, ஷிகர் தவண் லெக் திசையில் தூக்கி அடிக்க நினைத்து மிடில் ஸ்டம்பை இழந்தார். 4 பந்துகள் சென்று ரோஹித் சர்மாவின் வழக்கமான எட்ஜைப் பிடித்தார் போல்ட். பாண்டியா (1) இஷ் சோதியின் கூக்ளியில் முற்றிலும் ஏமாந்தார். இந்தியா 10-வது ஓவரில் 67/4 என்று தோல்வியின் வாசனையை முகர்ந்தது.

கோலியை இந்த விக்கெட்டுகள் ஒன்றும் செய்ய முடியவில்லை, அவரது ஆட்டத்தில் ஒரு அவசரமும், கோபமும் வெளிப்பட்டது, போல்ட்டை நேராகத் தூக்கி அடித்தார். போல்ட்டை ஒரே ஒவரில் 3 பவுண்டரிகள் அடித்தார். பிறகு சாண்ட்னரை லாங் ஆனில் ஒரு சிக்சருடன் 2 பவுண்டரிகள் அடித்தார்.

பந்துகள் ஒரு கட்டத்தில் பிட்சில் நின்று வந்தது, பிட்சில் ஒரு ‘க்ரிப்’ இருந்தது இஷ் சோதி, சாண்ட்னர் நன்றாக அதனைப் பயன்படுத்தினர். தோனி 8 ரன்களில் ஸ்டம்ப்டு ஆகியிருப்பார். தோனியை லெக் ஸ்டம்ப் லைனில் அவரது கால்காப்புக்கு வீசி முடக்கினர், ரன் விகிதம் 12, 13, 14 என்று எகிறிய போது தோனி கிரீசில் தடுமாறிக் கொண்டிருந்தது கோலியின் அழுத்தத்தை அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 85 ரன்கள் தேவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இருமுனைகளில்ம் வெளுத்துக் கட்ட வேண்டிய நேரத்தில் தோனியிடம் ஸ்ட்ரோக்குகள் பஞ்சமாயின, மேலேறி வந்து மேலேறி வந்து திணறினார். சுற்றினார் மாட்டவில்லை. அவர் வேகமாக ஓடுவதைப் பயன்படுத்தி நியூஸிலாந்து பீல்டர்கள் அவருக்கு சவுகரியமாக 2 ரன்களை விட்டுக் கொடுத்தனர். 18வது ஓவர் முடிவில் அவர் 28 பந்துகளில் 28 ரன்களையே எடுத்திருந்தார். கோலிக்கு அழுத்தம் ஏற சாண்ட்னரிடம் பின்னால் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 42 பந்துகளில் 8 பவுண்ட்ரிக்ள் 1 சிக்சருடன் அவர் 65 ரன்கள் எடுத்தார். பிறகு போல்ட் வந்தார் தோனி, அக்சர் படேலை வீழ்த்தினார். தனது சிறந்த டி20 பவுலிங்காக போல்ட் 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய அணி 156 ரன்களுக்கு மட்டுப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் போல்ட்டை பாயிண்ட் திசையில் பவுண்டரி அடித்துத் தொடங்கினார். கொலின் டி கிராண்ட் ஹோம் பந்தில் மீண்டும் பாயிண்டில் ஒரு பவுண்டரியும் பிறகு அதே ஒவரில் மீண்டும் ஷார்ட் பிட்ச் பந்தை பாயிண்ட்டில் தூக்கி அடித்தார், இது அருமையான பிளேஸ்மெண்ட். மீண்டும் போல்ட்டை பாயிண்டில் ஒரு பவுண்டரி அடித்தார், அவரது சாதகமான ஸ்ட்ரோக் பாயிண்டில் ஆடுவது என்பது தெரிந்தது. 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த போது மன்ரோவின் வேகம் குறைந்த விரலால் வீசப்பட்ட பந்தை பந்தின் லைனுக்கு நேராக ஆடாமல் குறுக்காக ஆடினார். லீடிங் எட்ஜ் எடுத்து பந்து வானில் ஏறியது. மன்ரோவே பிடித்தார், இரவு வெளிச்சத்தில் கடினமான கேட்ச்தான் ஷ்ரேயஸ் ஐயர் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

ஆட்ட நாயகனாக கொலின் மன்ரோ தேர்வு செய்யப்பட்டார், அடுத்த போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது, இந்த வெற்றியினால் அடுத்த போட்டியை நியூஸிலாந்து சுவாரசியமானதாக மாற்றியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்