காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் நிச்சயம் பதக்கம் வெல்வோம் என தமிழக தடகள வீராங்கனை சாரதா நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
20-வது காமன்வெல்த் போட்டி வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சாரதா நாராயணன் 100 மீ. ஓட்டம், 4*100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்கிறார். 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் மேற்கு வங்கத்தின் ஆஷா ராய், ஒடிசாவின் ஷர்பானி நந்தா, கர்நாடகத்தின் எச்.எம்.ஜோதி ஆகியோருடன் இணைந்து ஒடுகிறார் சாரதா. அதற்காக அவர்களுடன் இணைந்து பெங்களூரில் ஒன்றரை மாத கால பயிற்சியை நிறைவு செய்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் ஒரே தமிழக வீராங்கனையான சாரதா, காமன்வெல்த் போட்டி நடைபெறும் கிளாஸ்கோ நகருக்கு சனிக்கிழமை புறப்பட்டு சென்றார். அதற்கு முன்னதாக தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் போட்டியில் முதல்முறையாக பங்கேற்கிறேன். இந்த முறை நான் பங்கேற்கும் இரு பிரிவுகளிலுமே பதக்கம் வெல்ல முடியும் என நம்புகிறேன். கடந்த மாதம் மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தடகளப் போட்டி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்றது.
‘பெஸ்ட் டைமிங்’
அந்தப் போட்டி காமன்வெல்த் போட்டிக்கான தகுதிச்சுற்றாகும். அதில் 100 மீ. ஓட்டத்தில் 11.39 விநாடிகளில் இலக்கை எட்டினேன். அதன்மூலம் அந்தப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் நிகழ்த்தப்பட்டிருந்த 14 ஆண்டுகால ‘மீட் ரெக்கார்டை” (போட்டி சாதனை) முறியடித்தேன். 11.39 விநாடிகளில் இலக்கை எட்டியதுதான் எனது “பெஸ்ட் டைமிங்கும்” கூட. இதே நேரத்தில் (11.39 விநாடி) காமன்வெல்த் போட்டியிலும் இலக்கை எட்டும்பட்சத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு பதக்கத்தை வெல்ல முடியும்.
காலநிலை மாற்றம்
அதேநேரத்தில் கிளாஸ்கோவில் முற்றிலும் வேறுபட்ட காலநிலை நிலவும். உணவு, தூங்கும் நேரம் உள்ளிட்ட எல்லா விஷங்களும் மாறுபடும். அங்குள்ள காலநிலைக்கு ஏற்றவாறு என்னை தகவமைத்துக் கொண்டு போட்டி நடைபெறும் தினத்தில் நான் எப்படி செயல்படுகிறேன் என்பதைப் பொறுத்தும் எனது பதக்க வாய்ப்பு அமையும்.
தொடர் ஓட்டத்தில் பதக்கம்
4*100 மீ. தொடர் ஓட்டத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் பலமான அணியாக உள்ளோம். அதற்காக சிறப்பான முறையில் தயாராகியிருக்கிறோம். நாங்கள் 4 பேருமே சிறப்பான “பெஸ்ட் டைமிங்” வைத்திருக்கிறோம். அதனால் தொடர் ஓட்டத்தில் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றார்.
கடும் சவால்
இந்த முறை காமன்வெல்த் போட்டி சவாலாக இருக்குமா என்று கேட்டபோது, “நிச்சயம் கடும் சவால் இருக்கும். ஏனெனில் கடந்த முறை காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. அப்போது இங்கு நிறைய முன்னணி வீராங்கனைகள் வரவில்லை. ஆனால் இந்த முறை ஐரோப்பா கண்டத்தில் நடைபெறுவதால் அனைவரும் பங்கேற்பார்கள்.
இதுதவிர ஜுலை மாதத்தில் போட்டி நடைபெறுவதால் வெளிநாட்டினருக்கு அது கூடுதல் பலமாகும். இந்த சமயத்தில்தான் அவர்கள் உச்சகட்ட பார்மில் இருப்பார்கள். அதேநேரத்தில் 2010-ஐ விட இப்போது நாங்கள் பலமான அணியாக இருப்பதால் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறோம். எனது பயிற்சியாளர் அன்பு நிறைய உத்திகளை வகுத்து கொடுத்துள்ளார். அது எனக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
2007 முதல் 2010 வரையிலான காலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 100 மீ. ஓட்டம் மற்றும் 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் தொடர்ச்சியாக 4 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தாய்லாந்து மற்றும் சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகளப் போட்டிகளில் 3-வது இடம், 2005-ல் கொரியாவில் நடைபெற்ற போட்டியில் சிறந்த தடகள வீராங்கனைக்கான விருது உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார் சாரதா.
பதக்கம் உறுதி
இது தொடர்பாக பயிற்சியாளர் அன்புவிடம் கேட்டபோது, “கடந்த 8 ஆண்டுகளாக சாரதாவுக்கு பயிற்சியளித்து வருகிறேன். தற்போது அவருடைய செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. தொடர் ஓட்டத்துக்காக சரியான அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய வீராங்கனைகளுக்கு ஜமைக்கா மற்றும் பிரிட்டன் வீராங்கனைகள் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். எனினும் போட்டியின்போது சிறப்பாக செயல்படும்பட்சத்தில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago