“நான் இந்தியன் என்பதால் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என கூறலாம். ஆனால்...” - யுவராஜ் சிங்கின் கவலை

By ஆர்.முத்துக்குமார்

2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்திய மிடில் ஆர்டர் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ், ரெய்னா, யூசுப் பதான், விராட் கோலி, தோனி என்று ஒரு பெரும்படையே இருந்தது. யுவராஜ் தன் ஆல்ரவுண்ட் திறமையினால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இப்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய மண்ணில் ஐசிசி உலகக் கோப்பை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் உண்மையான பிரச்சினையை அலசுகிறார் யுவராஜ் சிங்.

இப்போதைய அணியில் மேலதிகமாக பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு எந்த டவுன் ஆர்டரிலும் நிலையான தன்மை கொண்ட வீரர்கள் யாரும் இல்லாத ஒரு நிலையை ராகுல் திராவிட் - ரோகித் சர்மா கூட்டணி ஏற்படுத்தியுள்ளது. 2007 ஐசிசி உலகக்கோப்பைக்கு முன்னதாக இப்படித்தான் கிரெக் சாப்பல் - திராவிட் கூட்டணி பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டு இந்தியாவின் வெற்றிகர தொடக்கக் கூட்டணியான சச்சின் - கங்குலி அல்லது சச்சின் - சேவாக் கூட்டணியை மாற்றியமைத்து தொடரே இந்திய அணிக்கு சீரழிவாக முடிந்து போனது.

அதே பாணியைத்தான் இப்போது ராகுல் திராவிட் உலகக் கோப்பைக்கு முன்னதாக கடைப்பிடித்து வருகிறார். அதாவது ஒரு நிலையான, வலுவான அணியை உருவாக்கி, அந்த அணியில் அனுபவத்தையும் இளம் வீரர்களையும் கலந்து சரிசம வாய்ப்பளித்து உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் பெரும்பாலான போட்டிகளில் வென்று உலகக்கோப்பைக்கு வரும் போது தன்னம்பிக்கையான ஒரு கேப்டன் ஒரு அணியாக வர வேண்டும் என்பதாகத்தானே கட்டமைக்க வேண்டும்?. ஆனால் இருப்பதையும் ஒழிக்கும் வேலை என்னவென்று நமக்குப் புரியவில்லை.

இதனால் வலுவிழந்த, தோல்விகளினால் தன்னம்பிக்கை இழந்த ஒரு அணியாக உலகக்கோப்பைக்கு இந்திய அணி வரும் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. யுவராஜ் சிங் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்: “தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தால், மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப்களை கட்டமைக்க வேண்டும். பேட்டர்களை சும்மா ஸ்ட்ரோக் மேக்கர்களாக கிரீசிலும் நீண்ட நேரம் நின்று அடித்து ஆடவும் செய்ய வேண்டும் என்பது சரியல்ல. தொடக்க வீரர்கள் சொதப்பினால் மிடில் ஆர்டரில் இறங்குபவர் அழுத்தத்தை தனக்குள் உறிஞ்சி சில பந்துகளை ஆடாமல் விடுத்து கூட்டணியை அமைக்க வேண்டும். இது கடினமான காரியம். இதற்கு அங்கு அனுபவஸ்தர்கள் தேவை.

நான் ஒரு தேசாபிமானியாக இந்தியன் என்பதால் இந்தியாதான் உலகக்கோப்பையை வெல்லும் என்று கூறலாம். ஆனால் இந்த இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்கள் களையப்படாவிட்டால் நிச்சயம் இந்திய அணி தடுமாறும். இந்திய மிடில் ஆர்டரின் பெரிய பிரச்சனை வீரர்களின் காயங்கள். அழுத்தம் அதிகமான ஆட்டங்களில் நாம் சோதனைகள் மேற்கொள்ளுதல் கூடாது.

ஒரு தொடக்க ஆட்டக்காரருக்கான திறமை வேறு மிடில் ஆர்டர் பேட்டருக்கான திறமை வேறு. இங்குதான் இந்திய அணியில் பிரச்சனைகள் இருக்கின்றன. மிடில் ஆர்டரில் யார் யார் ஆடப்போகிறார்கள், அவர்களுடன் யார் பணியாற்றுகிறார்கள்? இதுதான் கேள்வி. மிடில் ஆர்டர் இன்னும் தயாராகவே இல்லை. எனவே யாராவது அவர்களைத் தயார் செய்ய வேண்டும்” என்கிறார் யுவராஜ் சிங்.

இந்திய அணி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை யோசிக்க வேண்டும், இப்போதுள்ள அணியில் அனுபவ வீரர்கள் என்றால் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர்தான். எனவே ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் / இஷான் கிஷன் ஆகிய தொடக்க கூட்டணியை வைத்துக் கொண்டு 3ம் நிலையில் ரோஹித் சர்மா வர வேண்டும். கோலிதான் 4ம் நிலைக்குச் சரியான வீரர், அருமையாக இலக்குகளை விரட்டக்கூடியவர். அவருடைய சமீபத்திய டி20 திறமைகளும் கூட சேர்ந்தால் கடைசி வரை இவர் நின்றால் இந்திய அணியை அசைக்க முடியாது.

5ம் ஆம் நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் அல்லது கே.எல்.ராகுல், ராகுலை விக்கெட் கீப்பராக நியமித்தால் இவர்தான் சரி. இவருக்குப் பிறகு பினிஷிங் ரோலில் டி20 போலவே சூரியகுமார் யாதவ்வை வைத்துக் கொள்ளலாம். பிறகு ஜடேஜா, அக்சர் படேல், ஷமி, பும்ரா, சிராஜ் வரலாம். இப்படியாக மாற்று யோசனை மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ரோஹித், விராட் கோலி இணைந்து கணிசமான ஓவர்களை விளையாடி ரன் ரேட்டையும் விக்கெட்டையும் தக்க வைக்க முடிந்தால் பிறகு பினிஷிங் ஒரு மேட்டரே இல்லை. எனவே உலகக்கோப்பைக்குள் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் இதைத்தான் செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்