உலகக் கோப்பை கால்பந்து | கால் இறுதி சுற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

பிரிஸ்பன்: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் நைஜீரியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்திகால் இறுதி சுற்றில் கால் பதித்தது.

பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. இதிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுகால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

87-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை லாரன் ஜேம்ஸுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இதனால் அந்த அணி 10 பேருடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் நைஜீரியா அணியை கோல் அடிக்கவிடாமல் இங்கிலாந்து அணியின் டிபன்ஸ் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக் கண்டது.

ஆஸ்திரேலியா அசத்தல்: சிட்னியில் நடைபெற்ற நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-0 என்றகோல் கணக்கில் டென்மார்க்கை வென்றுகால்இறுதி சுற்றில் கால் பதித்தது. அந்த அணி சார்பில் 29-வது நிமிடத்தில் கெய்ட்லின் ஃபோர்டும், 70-வது நிமிடத்தில் ஹேலி ராசோவும் கோல் அடித்து அசத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE