ஆஷஸ் தொடர், பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த சதத்தை எடுக்க, ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்து இங்கிலாந்தைக் காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்ட முடிவில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு 5 ரன்களுடனும் ஸ்டோன்மேன் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதாவது இங்கிலாந்து 7/2 என்று திணறி வர, ஸ்மித்தின் அதி அற்புத சதத்தினால் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது.
165/4 என்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய போது ஷான் மார்ஷ் ஒரு பவுண்டரி அடித்து தன் அரைசதத்தை எடுத்து 51 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடின் கனகச்சிதமான ஸ்லோ பந்தில் மிட் ஆஃபில் ஜிம்மி ஆண்டர்சனிடம் எளிதான கேட்ச் ஆனது ஆஸ்திரேலியா 175/5.
ஷான் மார்ஷும், ஸ்மித்தும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 99 முக்கிய ரன்களைச் சேர்த்தனர். டிம் பெய்ன் களமிறங்கியவுடன் அடுத்த 80 பந்துகள் ஸ்மித்தும், பெய்னும் இங்கிலாந்தின் கடுமையான சோதனைகளை ஏற்படுத்தும் பந்து வீச்சை எதிர்கொண்டனர், பவுண்டரிகள் வறண்டன, சிங்கிள்களும் வறண்டன. ஆனால் ஸ்மித் கவலைப்படவில்லை.
பலனளிக்காத ஷார்ட் பிட்ச் பவுலிங்
தொடக்கத்தில் 2 ஸ்லிப் கல்லி என்று இங்கிலாந்து நார்மலாகத் தொடங்கியது. பிறகு ஸ்மித்தைக் குறிவைத்து, அவரது விக்கெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல உத்திகளைக் கடைபிடித்தது, ஜோ ரூட் அருமையாக கேப்டன்சி செய்தார், லெக் திசையில் 6 பீல்டர்களை நிறுத்தி வைத்து ஆஃப் திசையில் சிங்கிள்களை கட் செய்யும் களவியூகம், இதில் ஸ்மித்துக்கு ஏராளமான ஷார்ட் பிட்ச் பந்துகளை சரமாரியாக வீசினர். ஸ்மித் எதற்கும் அசரவில்லை. உணவு இடைவேளை வரை ஸ்மித் 64 ரன்களில் தொடங்கி வெறும் 17 ரன்களையே எடுத்து 81 ரன்களுக்கு வந்தார். ஜோ ரூட்டின் சாதனை என்னவெனில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை வேகமாக ரன் எடுக்கவிடாமல் செய்தார். அவரைக் கட்டிப்போட்டார், ஆனால் ஸ்மித் இதனை மகிழ்ச்சியுடனேயே எதிர்கொண்டார், ஏனெனில் தான் நின்று விட்டால் நிச்சயம் முன்னிலை பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை, அதோடு இல்லாமல் இரு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஸ்மித்தின் இன்னிங்ஸ் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
டிம் பெய்ன் 42 பந்துகள் போராடி 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது புதிய பந்து எடுத்தவுடன் ஜேம்ஸ் ஆண்டர்சனின் துல்லியமான அவுட் ஸ்விங்கருக்கு எட்ஜ் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வெளியேறினார், அந்தக் கேட்சை பேர்ஸ்டோ வலது புறம் ஒரு கையால், கால்பந்து கோல்கீப்பர் போல் பிடித்தார்.
பிராட் ஓவரில் மிட்செல் ஸ்டார்க் இந்த டெஸ்ட் போட்டியின் ஆகச்சிறந்த ஷாட்டை அடித்து சிக்ஸ் விளாசினார், முன்னால் காலைத்தூக்கிப் போட்டு லாங் ஆஃபில் அடித்தார், அதிக முயற்சி இல்லாத ஸ்ட்ரோக் ஆனால் சிக்ஸுக்கு பந்தை தூக்கிச் சென்றது. இதனை ஸ்டார்க்கே எதிர்பார்க்கவில்லை, பிராட் ஆச்சரியத்தில் புன்னகைத்தார். ஆனால் அடுத்ததாகவே ஒரு பந்தை சற்றே ஷார்ட் ஆஃப் லெந்தில் வீச ஸ்டார்க் வலது கையை அழுத்தி தடுத்தாட அது எழும்பி பிராட் கையிலேயே கேட்ச் ஆனது ஆஸ்திரேலியா 209/7 என்று ஆனது.
ஸ்மித்தின் தனித்துவம்:
ஸ்மித்தின் தலைக்கு மேல் பவுன்சர் வீசி இடையிடையே புல் லெந்த் பந்துகளை வீச இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேக் பால், கிறிஸ் வோக்ஸ் தவறிவிட்டனர், ஸ்மித்தை வீழ்த்துவதற்கு நெருக்கமாக வந்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே. ஒரு ஓவரில் இருமுறை இன்ஸ்விங்கரில் புல் லெந்த் பந்தில் அவரைத் திணற வைத்தார். மற்றபடி ஸ்மித்தை உண்மையில் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அனைத்து பந்துகளுக்கும் பின் காலில் சென்று ஆடுவது என்பதுதான் ஸ்மித்தின் தனித்துவ உத்தி, ஓவர் பிட்ச், ஆஃப் வாலி வீசினாலும் பின் காலில் சென்றுதான் ஆடினார். இங்கிலாந்து பந்து வீச்சில் அதிவேகம் இல்லாததால் பின் காலில் சென்று பந்தை அவர் எதிகொள்ளும் போது அது ஸ்விங் ஆகி முடிந்திருந்தது.
அவரை முன்காலில் வந்து ஆடவே வைக்க முடியவில்லை, ஏறக்குறைய அவரை முன்னால் வந்து ஆட வைப்பது சாத்தியமில்லாமலேயே போய் விட்டது, ஒரு தரமான ஸ்பின்னர் அல்லது ஒரு அதிவேக பந்து வீச்சாளர், இல்லையெனில் நம் புவனேஷ் குமார், பிரவீண் குமார் போன்றவர்கள் மட்டுமே அவரை முன்னால் வந்து ஆட வைக்க முடியும் போல் தெரிகிறது, இந்திய அணி கடந்த முறை ஆஸ்திரேலியா சென்றிருந்த போது ஸ்மித்தை வீழ்த்தவே முடியவில்லை என்பதுதான் உண்மை, இந்தமுறை இங்கிலாந்து சிக்கியது. ஸ்மித் போன்ற வீரர்களை அதிகப் பந்துகளை மட்டையில் சந்திக்கவைக்க வேண்டும், ரன்கள் விரைவாக வந்தாலும் அவரை வீழ்த்துவதற்கு வாய்ப்புகள் ஏற்படும், மாறாக அவரை வெறுப்பேற்றி வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால் அது எதிராகவே போய் முடியும் என்ற பாடத்தை ஸ்மித் இங்கிலாந்துக்குக் கற்றுக் கொடுத்தார். இங்கிலாந்து அணியில் தரமான ஸ்பின் வீச்சாளர் இல்லாததும் அவரை முன்னால் வந்து ஆடவைக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம்.
அவரை முன்னால் வந்து ஆட வைக்க 3 ஸ்லிப் ஒரு கல்லி, கவர் திசையை காலியாக வைத்து, மிட் ஆஃபை காலியாக வைத்து ஓவருக்கு 4 குட்லெந்த் அவுட்ஸ்விங்கர்களையோ இன்னும் கொஞ்சம் முன்னாலேயோ பிட்ச் செய்து இங்கிலாந்து வீசியிருக்க வேண்டும், மாறாக அவரது பொறுமையைச் சோதிக்கும் முறையைக் கடைபிடித்தது இங்கிலாந்துக்கே வினையாகப் போய்விட்டது. ஓவர் பிட்ச் பந்தையே அவர் பின்னால் சென்று பிளிக் பாணியில் மிட் ஆனில் பவுண்டரி அடித்தார். பவுன்சர்களை அவர் மதிக்கவேயில்லை. காரணம் ஒரு பவுன்சர் கூட அவரது மார்பைக் குறிவைத்து வீசப்படவில்லை, அனைத்தும் தலைக்கு மேல் சென்றது. புதிய பந்து எடுத்து 3 ஒவர்களுக்குப் பிறகு ஆண்டர்சன் காயம் காரணமாக வீச முடியாமல் போனதும் இங்கிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
ஸ்டார்க் ஆட்டமிழந்தவுடன் பாட் கமின்ஸ் களமிறங்கினார், இங்கிலாந்தின் உத்திகள் வறண்டன். அவர் 120 பந்துகளில் 42 ரன்களை எடுக்க, 8-வது விக்கெட்டுக்காக 66 ரன்கள் மிக முக்கியமாகச் சேர்க்கப்பட்டது.
மிகப்பொறுமையாக எங்கு போட்டாலும் பேக்ஃபுட் என்று முடிவெடுத்து ஆடிய ஸ்மித், கடைசியில் ஸ்டூவர்ட் பிராட் பந்தை எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்து தனது 21-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார், சராசரி பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் 73 ரன்களைக் கடந்தது. 261 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் மிகச்சிறந்த சதத்தை அவர் அடித்து முடித்தவுடன் மேலும் 5 பவுண்டரிகளை அடித்து 326 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், இது காவிய இன்னிங்ஸ் என்று வர்ணிக்கப்படுகிறது.
பாட் கமின்ஸ் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மென் போலவே உறுதுணையாக ஆடினார், ஒருமுறை ஆக்ரோஷமாகி மொயின் அலியை லாங் ஆனில் சிக்ஸ் விளாசினார், மொத்தம் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து வோக்ஸ் வீசிய பந்தை டிரைவ் ஆட முயன்றார் எட்ஜில் குக்கிடம் கேட்ச் ஆனது. மொயின் அலி பந்தை சுழற்ற முயற்சி செய்து ஹேசில்வுட் பவுல்டு ஆக, நேதன் லயன் விக்கெட்டை ஜோ ரூட் கைப்பற்றினார், ஸ்மித் 141 நாட் அவுட், வீழ்த்த முடியவில்லை. ஆஸ்திரேலியா 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் பிராட் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஹேசில்வுட் அபாரம்: இங்கிலாந்து திணறல்
நல்ல நிலையிலிருந்து ஸ்மித்தின் சதத்தினால் 26 ரன்கள் பின் தங்கிய இங்கிலாந்து அணி களமிறங்கிய போது ஆஸ்திரேலிய அணி தன் உண்மையான தன்மையைப் பெற்றிருந்தது, ஆக்ரோஷம், பேச்சுக்கள், பரிபாஷைகள் என்று களத்தில் விளையாடத் தொடங்கின.
இதற்கிடையே ஹேசில்வுட் ஒரு நல்ல இலக்குடன் கூடிய பவுன்சரை லெக் அண்ட் மிடிலில் வீச அலிஸ்டர் குக் (7), ஹூக் செய்தார் மட்டையில் சரியாக சிக்காமல் டாப் எட்ஜ் ஆகி ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனது, இதுவும் அருமையான கேட்ச். முதல் இன்னிங்சில் சுவராக நின்ற ஜேம்ஸ் வின்ஸ் இந்த முறை 2 ரன்களில் பிரிஸ்பன் பிட்சுக்கே உரிய வகையில் ஆஃப் ஸ்டம்பில் ஷார்ட் ஆஃப் லெந்த், எகிறியது, போதுமான வேகம் இருந்தது, இவ்வகைப் பந்துகள் எட்ஜ் எடுத்தே தீரும், ஸ்மித் கேட்ச் எடுத்தார்.
ஜோ ரூட் இறங்கியவுடன் ஆஸி. அணியினர் ஒட்டுமொத்தமாக அவர் மீது ஆக்ரோஷம் காட்டினர், மிட்செல் ஸ்டார்க் வீசிய அதிவேக ப்வுன்சர் ஒன்று ஹெல்மெட்டில் வந்து வேகமாக மோதியது, ஹெல்மெட்டின் ஸ்ட்ராப் கழன்று விழுந்தது. அவர் 28 பந்துகளில் 5 ரன்களுடனும், ஸ்டோன்மேன் மீண்டும் கல்தூணாக நின்று 19 ரன்களுடனும் இருக்கின்றனர்.
பிரிஸ்பன் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது, 3-ம் நாள் ஆட்டம் ஒரு டெஸ்ட் மேட்சின் இலக்கணப்படி பந்துக்கும் மட்டைக்குமான கடும் போட்டியாக அமைந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
56 mins ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago