ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | பாக். அணியின் பிசியோவாக இயங்கும் சென்னைவாசி

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு உதவி வருகிறார் சென்னையை சேர்ந்த விளையாட்டு பிசியோதெரபிஸ்ட் வல்லுனரான ராஜகமல் (Rajakamal). அவரது இந்த பணி எப்படி சாத்தியமானது என்பது குறித்து பார்ப்போம்.

ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3-தேதி தொடங்கியது. நடப்பு சாம்பியன் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ளன.

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷானாஸ் ஷேக் மற்றும் அணியின் பிசியோவும் இந்தியாவுக்கு வராத சூழலில் இந்தத் தொடர் சார்ந்து எதார்த்த சிக்கலை எதிர்கொண்டுள்ளது அந்த அணி. இது போன்ற தொடர்களில் பிசியோவின் பங்கு மிகவும் அவசியம். அதனை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணி தமிழ்நாடு ஹாக்கி இணைச் செயலர் கிளமென்ட் லூர்துராஜை அணுகியுள்ளது. அவரது ஏற்பாட்டின் பேரில் ராஜகமல் அந்த அணியுடன் இணைந்துள்ளார். தமிழ்நாடு ஹாக்கி அணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் பிசியோவாக அவர் பணியாற்றியுள்ளார். விளையாட்டு துறையில் பிசியோவாக 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

“தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பாகிஸ்தான் அணியுடன் நான் பணியாற்ற வேண்டுமென்ற தகவலை பெற்றேன். தொடர் முழுவதும் வீரர்களுக்கு காயம் சார்ந்த அச்சுறுத்தல் ஏதும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்வது தான் எனது பணி. தேசிய அணிக்காக பணியாற்றுவது நல்லதொரு அனுபவம். அது பாகிஸ்தான் உட்பட எந்த அணியாக இருந்தாலும் சரி. அணியின் உறுப்பினர்கள் அனைவரும் நல்ல முறையில் பழகுகின்றனர்.

எனக்கு அவர்களுடன் பேசுவதில் தான் சிக்கல். எனக்கு இந்தி மொழி தெரியாது. அதனால் அணியில் ஆங்கிலம் தெரிந்தவர்களின் உதவியுடன் அனைவருடனும் பேசி வருகிறேன். இந்த தொடர் முடியும் போது நான் கொஞ்சம் இந்தி கற்று இருப்பேன் என நம்புகிறேன். அதே போல நேரம் இருந்தால் அவர்களுக்கு தமிழ் பேச பயிற்றுவிப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கும் பாகிஸ்தான் அணிக்குமான பந்தம் மிகவும் இணக்கமானது. கடந்த 1999-ல் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வென்ற போது மைதானத்தில் திரண்ட ரசிகர்கள் பாகிஸ்தான் அணிக்கு கர ஒலி எழுப்பி தங்களது பாராட்டினை தெரிவித்திருந்தனர். தற்போது ராஜகமல் பாகிஸ்தான் அணிக்கு பிசியோவாக உதவி வருகிறார். வரும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சென்னையில் சில போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE