WI vs IND முதல் டி20: இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மே.இ.தீவுகள்

By செய்திப்பிரிவு

டிரினிடாட்: இந்திய கிரிக்கெட் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இந்தப் போட்டி கடைசி பந்து வரை சென்றிருந்தது.

இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் தற்போது இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

நேற்று (ஆகஸ்ட் 3), டிரினிடாட் பகுதியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக கேப்டன் ரோவ்மேன் பவல் அதிகபட்சமாக 32 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். பூரன் 41 ரன்கள், பிராண்டன் கிங் 28 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் சஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் இஷான் கிஷன் என இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் திலக் வர்மா, 22 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் எதிர்கொண்ட 2 மற்றும் 3-வது பந்தை சிக்ஸர் விளாசி அவர் மிரட்டி இருந்தார்.

அதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் என இருவரும் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது இந்தியா. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE