சிறப்பாக விளையாடி என்ன பயன்? - ஐசிசி WTC புள்ளிப் பட்டியலில் மே.இ.தீவுகளுக்கும் கீழே சென்ற இங்கிலாந்து!

By ஆர்.முத்துக்குமார்

நடந்து முடிந்த ஆஷஸ் தொடர் ஓர் அற்புதமான டெஸ்ட் கிரிக்கெட் தொடராக அமைந்ததோடு, கடுமையான சவாலான கிரிக்கெட் ஆட்டத்தை இரு அணிகளும் ஆடி தொடர் 2-2 என்று சமன் ஆனது. இதன் மூலம் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்தாலும், இந்தத் தொடரில் இங்கிலாந்துதான் 3-2 என்று வென்றிருக்க வேண்டும். ஒரு டெஸ்ட் 5-ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டதில் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்புப் பறிபோனது. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் என்னவெனில், ஓவர்களை குறித்த நேரத்திற்குள் வீசாததால் இங்கிலாந்து 19 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழக்க, ஆஸ்திரேலியா 10 புள்ளிகளை இழந்துள்ளது.

இதனையடுத்து, இங்கிலாந்துக்கு இந்த ஆஷஸ் தொடர் மூலம் 9 புள்ளிகளே கிடைக்க ஆஸ்திரேலியாவுக்கு 18 புள்ளிகள் கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணி நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 2 ஓவர்கள், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 9 ஓவர்கள், ஓல்ட் டிராபர்ட் 3வது டெஸ்ட்டில் 3 ஓவர்கள் ஓவலில் 5 ஓவர்கள் பின் தங்கியிருந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்தனர். ஓவர் ரேட்டைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா பிரமாதமான விழிப்புணர்வுடன் செயல்பட்டாலும் ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட்டில் 10 ஓவர்கள் பின் தங்கினர். இதனால் இங்கிலாந்து 2 வெற்றிகள் மூலம் 24 புள்ளிகள் பெற்றனர். ஒரு ட்ராவுக்கு 4 புள்ளிகள் ஆக மொத்தம் 28 புள்ளிகள் இதிலிருந்து ஓவர் ரேட் பின் தங்கியதால் 19 புள்ளிகளை நீக்கிவிட்டால் இங்கிலாந்துக்கு 9 புள்ளிகளே கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கும் 24 புள்ளிகள் பிளஸ் ஒரு ட்ரா 4 புள்ளிகளுடன் 28 புள்ளிகள் அதில் ஸ்லோ ஓவர் ரேட் அபராதத்தைக் கழித்தால் 18 புள்ளிகளைத்தான் இந்தத் தொடரின் மூலம் அவர்கள் பெற்றுள்ளார்கள். இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஐசிசி அட்டவணையில் ஆஸ்திரேலியா 30% பாயிண்ட்டுகளுடன் 3ம் இடத்தில் இருக்கிறது. முதலிடம் பாகிஸ்தான், 2ம் இடம் இந்தியா. இங்கிலாந்து 15% புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது. அதாவது வெஸ்ட் இண்டீஸுக்கும் கீழே சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 16.67 % புள்ளிகள் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி டர்பனில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டி ஸ்லோ ஓவர் ரேட்டுக்கான புதிய அபராத விதிகள் வகுக்கப்பட்டன. இதோடு அணிகள் தங்கள் ஊதியத்திலிருந்து 5% தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். அதாவது ஒரு புள்ளி குறைவுக்கு 5% அபராதம். இந்த வகையில் ஆஸ்திரேலியா 10 புள்ளிகளை இழந்து 50% அபராதத் தொகை செலுத்த நேரிட்டுள்ளது. இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகளில் முறையே 10%, 45%, 15% மற்றும் 25% தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும்.

இந்த ஸ்லோ ஓவர் ரேட் பெனால்டியினால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பிரமாதமாக ஆடியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறுவது சிக்கலாகியுள்ளது. 2025ம் ஆண்டு இறுதியில் ஆட தோராயமாக 60% புள்ளிகள் தேவைப்படலாம். இங்கிலாந்துக்கு இந்த சாம்பியன்ஷிப் சுழற்சியில் இன்னும் 16 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ள நிலையில் அந்த அணி மேலும் 151 புள்ளிகளைப் பெற்றால்தான் இறுதி வாய்ப்பை நோக்க முடியும். அதாவது தோராயமாக 11 வெற்றிகள் 3 ட்ராக்கள், அல்லது 12 வெற்றிகள் அவசியம். அதில் ஸ்லோ ஓவர் ரேட் இருந்தால் அவ்வளவுதான் கதை முடிந்து விடும்.

ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் 14 டெஸ்ட்கள் உள்ளன. இதில் அவர்கள் மே.இ.தீவும் 137 புள்ளிகளை எடுக்க வேண்டும். அதாவது 9 அல்லது 10 வெற்றிகள் தேவை. அல்லது 8 வெற்றிகள் 6 ட்ராக்கள் என்ற சமன்பாட்டிலும் இருக்கலாம். இந்திய அணிக்கு 17 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன, இதில் மேலும் 121 புள்ளிகளைப் பெற வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிக்கு 12 புள்ளிகள், டை ஆனால் 6 புள்ளிகள், ட்ரா ஆனால் 4 புள்ளிகள் தோல்விக்கு புள்ளிகள் கிடையாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE