காமன்வெல்த்: ஜோஷ்னா தோல்வி, சைக்கிளிங்கிலும் இந்தியா ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.ஜோஷ்னா 3-11, 8-11, 11-8, 5-11 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்தின் ஜோலே கிங்கிடம் தோல்வி கண்டார்.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோஷ்னா, இந்த முறை பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாகவே வெளியேறியுள்ளார். காமன்வெல்த் போட்டியில் 1998-ம் ஆண்டு ஸ்குவாஷ் சேர்க்கப்பட்டது. அதுமுதல் தற்போது வரை ஸ்குவாஷில் இந்தியா ஒரு பதக்கம்கூட வென்றதில்லை.

இந்நிலையில், காமன்வெல்த் சைக்கிளிங் போட்டியில் இந்தியாவின் ஏமாற்றம் தொடர்ந்து வருகிறது. போட்டியின் 2-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் 4000 மீ. சைக்கிளிங் போட்டி, மகளிர் 3000 மீ. சைக்கிளிங் போட்டி என இரண்டிலுமே இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

ஆடவர் 4000 மீ. போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் மஞ்ஜீத் சிங், சோம்பிர், அமித் குமார் ஆகியோர் முறையே 16, 17 மற்றும் 18-வது இடங்களைப் பிடித்தனர். 19 பேரை உள்ளடக்கிய இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ஷகீல் போட்டியில் களமிறங்கவில்லை. அதன்படி பார்த்தால் இந்திய வீரர்கள் கடைசி 3 இடங்களையே பிடித்துள்ளனர். முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

மகளிர் 3000 மீ. சைக்கிளிங் போட்டியில் இந்தியாவின் சுனிதா யாங்லெம் 17-வது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் மொத்தம் 19 பேர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE