இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மே.இந்தியத் தீவுகள் அணியில் ஷாய் ஹோப், ஒஷேன் தாமஸ்

By செய்திப்பிரிவு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் நடைபெறவுள்ளது.

முதல் போட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி டிரினிடாட்டிலும், 2 மற்றும் 3-வதுபோட்டிகள் முறையே 6, 8-ம் தேதிகளில் கயானாவிலும் நடைபெறவுள்ளன. 4, 5-வது போட்டிகள் முறையே 12, 13-ம் தேதிகளில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் லாடர் ஹில்லில் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஷாய் ஹோப், வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ் ஆகியோர் திரும்பியுள்ளனர். கேப்டனாக ரோவ்மன் பவல் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக கைல் மேயர்ஸ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி தேர்வுக் குழுத் தலைவர் டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை மனதில் வைத்தேதற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியைத் தேர்வு செய்துள்ளோம். உலகக் கோப்பை தொடருக்கு அணியில், யார் பொருத்தமாகவும், சரியான தேர்வாகவும் இருப்பார்கள் என்பதைக் கணிக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

அதற்கான பல்வேறு திட்டங்களை வாரியம் அமல்படுத்தி வருகிறது.

எனவே, அணியில் புதிய வீரர்களை களமிறக்கி பரிசோதித்து வருகிறோம். அடுத்த ஓராண்டுக்குள் வீரர்களை முழுமையாகத் தயார் செய்ய முடிவு செய்துள்ளோம். எங்கள் அணியில் சில மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர். அவர்களை சரியான வகையில் தயார்செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

அணி விவரம்: ரோவ்மன் பவல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹுசைன், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், ஒபேட் மெக்காய், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓடியன் ஸ்மித், ஒஷேன் தாமஸ். - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE