WI vs IND 3rd ODI | இந்திய அணி 351 ரன்கள் குவிப்பு: கிஷன், சஞ்சு, பாண்டியா அதிரடி

By செய்திப்பிரிவு

டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 351 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணிக்காக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக பேட் செய்து அரை சதம் கடந்தனர். ஷூப்மன் கில், 92 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன.

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த சூழலில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்காக இன்னிங்ஸை தொடங்கிய இஷான் கிஷன் மற்றும் ஷூப்மன் கில் இணைந்து 143 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிஷன், 64 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ருதுராஜ் கெய்க்வாட், 8 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த சஞ்சு சாம்சன், 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் இதில் அடங்கும். கில், 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து 65 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் 35 ரன்களில் வெளியேறினார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா, 52 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். மறுமுனையில் ஜடேஜா 8 ரன்கள் எடுத்திருந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது. கடைசி ஓவரில் 6, 0, 4, 6, 0, 2 என ரன்கள் குவித்தார் பாண்டியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE