LPL | ஆட்டத்தை இடைமறித்த பாம்பு: வங்கதேசத்தை மேற்கோள் காட்டி தினேஷ் கார்த்திக் ட்வீட்

By செய்திப்பிரிவு

கொழும்பு: நடப்பு எல்பிஎல் டி20 தொடரில் காலே டைட்டன்ஸ் மற்றும் டம்புல்லா ஆரா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மைதானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்து ஆட்டத்தை இடைமறித்தது. இது தொடர்பாக வங்கதேசத்தை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

காலே மற்றும் டம்புல்லா அணிகளுக்கு இடையிலான போட்டியில் டம்புல்லா அணி பேட் செய்த போது பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் தாமதமானது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த சூழலில் தினேஷ் கார்த்திக் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்த போட்டியில் இரு அணிகளும் 180 ரன்கள் எடுத்தன. அதனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் காலே அணி வெற்றி பெற்றது.

“நான் இது வங்கதேசம் என நினைத்தேன். களத்துக்குள் பாம்பு” என தினேஷ் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார். அதோடு நாகின் டான்ஸ் மற்றும் நிதாஸ் டிராபி என ஹாஷ்டேகும் பதிவிட்டிருந்தார். கடந்த 2018-ல் நிதாஸ் டிராபி முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக 8 பந்துகளில் 29 ரன்களை தினேஷ் கார்த்திக் எடுத்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE