“மகா அறுவை!”- ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணி மீதும் இங்கிலாந்து ரசிகர்கள் கேலி

By ஆர்.முத்துக்குமார்

ஜானி பேர்ஸ்டோவை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அவர் கிரீசை விட்டு வெளியேறிய நிலையில் ரன் அவுட் செய்தது ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்று இங்கிலாந்தில் ஒரு கும்பல் கிளம்பி விமர்சிக்க, அதனையடுத்து எம்சிசி உறுப்பினர்கள் சிலரால் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர் மற்றும் கவாஜா வசைகளுக்கு இலக்காயினர். இது நடந்தது லார்ட்ஸ் பெவிலியன் செல்லும் வழியில் என்றால், ஓவலில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை நோக்கி கேலியை ஏவியுள்ளார் ஒருவர்.

3-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பெரிய முன்னிலையை நோக்கி நடைபோட்டது. ஜாக் கிராலி, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பங்களிப்பு செய்ய பாஸ்பால் அதிரடியில் ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. அன்றைய தினம் ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லைக் கோட்டைக் கடந்து பெவிலியனுக்குச் செல்லும் வழியில் ஸ்டாண்டில் இருந்த ரசிகர்களில் ஒருவர் ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரர் அவரைக் கடந்து செல்லும்போதும் ‘மகா அறுவை’ என்ற அர்த்தம் கொடுக்குமாறு ‘போரிங்’ என்ற சொல்லைக் கேலியாகப் பயன்படுத்தினார்.

இதை மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ‘போனால் போகட்டும்’ என்று எதுவும் பேசாமல் சென்றுவிட்டனர். ஆனால் லபுஷேன், கவாஜா இருவரும் கடக்கும் போதும் இதே வார்த்தையை அவர் மீண்டும் பயன்படுத்த, இருவரும் கடும் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கவாஜா அந்த ரசிகரிடம் ‘பேசாமல் இரு’ என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ள... லபுஷேன், ‘நீ என்ன சொன்ன? நீ என்ன சொன்ன?’ என்று கோபமாகக் கேட்டார். இதை சற்றும் எதிர்பாராத அந்த ரசிகர் மன்னிப்புக் கேட்டார்.

அதாவது இங்கிலாந்து பாஸ்பால் அதிரடி மூலம் விறுவிறுப்பாக ஆட ஆஸ்திரேலியா பேட்டிங்கில் மகா அறுவையாக ஆடுகின்றது என்பதுதான் அந்த ரசிகரின் கேலி மற்றும் குத்தல் பேச்சுக்குக் காரணம். அதுவும் லபுஷேன் அன்று 8 ரன்களுக்கு 80 பந்துகளை எடுத்துக் கொண்டார். கவாஜா முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அவருக்கேயுரிய டெஸ்ட் போட்டி பாணியில் சிறப்பாக ஆடினார். ஆனால், பாஸ்பால் அதிரடிக்கு சமீப காலமாக பழக்கப்பட்டுப் போன ரசிகர்கள் ஆஸ்திரேலியா பேட்டிங்கை அறுவையாக இருப்பதாக உணர்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மூல காரணம் பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்த விதம்தான். அது முற்றிலும் விதிமுறைகளுக்குட்பட்டதே என்று தெரிந்தும் ரசிகர்கள் கோபம் இன்னும் ஆஸ்திரேலியா மேல் அடங்கவில்லை என்பதுதான் இத்தகைய விஷமப் பேச்சுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் காரணமாக உள்ளது.

எந்த அணியாக இருந்தாலும் பேட்டர் ஒருவரை வீழ்த்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டுதான் இருக்கும். பாகிஸ்தான் ஒருமுறை ஆஸ்திரேலிய வீரர் ஹில்டிச் என்பவர் பந்தை கையில் எடுத்து பவுலரிடம் கொடுத்தார் என்பதற்காக பந்து டெட் ஆகவில்லை ‘ஹேண்டில்ட் த பால்’ என்று அவுட் கேட்டு வெளியேற்றினர். இது உண்மையில் விதிகளுக்குட்பட்டதுதான். ஆனால், இயல்பான ஒரு செயலைப் போய் அவுட்டுக்குக் காரணமாக்கலாமா என்பது தான் அப்போதும் பேச்சாக எழுந்தது.

ஆனால், இவையெல்லாம் பார்ட் ஆஃப் த கேம் என்ற மனப்பக்குவம் எப்போதும் வீரர்கள் தரப்பில் இருக்கும். ஆனால் ரசிகர்கள் தரப்பு அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இன்னும் எட்டவில்லை என்பதே உண்மை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்