10 பவுண்டரி, 13 சிக்ஸர், 40 பந்தில் செஞ்சுரி.. - நிகோலஸ் பூரன் அதிரடியால் கோப்பை வென்ற எம்.ஐ நியூயார்க்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் நிகோலஸ் பூரன் சாதனை சதம் வீசி MI நியூயார்க் அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.

அமெரிக்காவில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில், சர்வதேச வீரர்களைக் கொண்டு மேஜர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் அணிகளை நிர்வகிக்கும் உரிமையாளர்களே அங்கும் அணிகளை வாங்கியுள்ளனர். இந்தத் தொடரின் முதல் சீஸனின் இறுதிப் போட்டியில் எம்.ஐ நியூயார்க் அணியும் சியாட்டல் ஆர்கஸ் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த சியாட்டல் ஆர்கஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. குயிண்டன் டி காக் அதிகபட்சமாக 87 ரன்கள் சேர்க்க, எம்.ஐ நியூயார்க் அணி சார்பில் ட்ரெண்ட் பவுல்ட், ரஷீத் கான் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

184 ரன்கள் இலக்கை துரத்திய எம்.ஐ நியூயார்க் அணி ஆட்டத்தின் 3-வது பந்தில் ஸ்டீவன் டெய்லர் விக்கெட்டை பறிகொடுத்தது. இதன்பின் வந்த கேப்டன் நிகோலஸ் பூரன் சியாட்டல் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் சந்தித்த முதல் பந்தை டாட் பால் என்றாலும், இரண்டாவது பந்தில் சிக்ஸர் விளாசி தனது அதிரடியை தொடங்கினார். சிங்கிள்ஸ் பெரிதாக இல்லாமல் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை அடித்து சியாட்டல் பவுலர்களை கலங்கடித்தார்.

16 பந்தில் அரைசதம் பதிவு செய்த நிகோலஸ் பூரன் 40 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக 55 பந்துகளைச் சந்தித்து 137 ரன்கள் விளாசியதுடன் அணியை முதல் சீஸனில் கோப்பை வெல்லவும் காரணமாக அமைந்தார். பூரன் எடுத்த 137 ரன்களில் 10 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் அடக்கம். பூரன் அதிரடி காரணமாக எம்.ஐ. நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE