பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது இந்திய அணி. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மே.இ.தீவுகள் இந்திய அணியை அபாரமாக வீழ்த்தி ஒருநாள் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் களமிறங்கிய இந்திய அணி முதலில் பேட் செய்ய சரியாகக் களமிறக்கப்பட்டது, இஷான் கிஷன் தவிர மற்றெல்லோரும் சொதப்ப இந்திய அணி 181 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 36.4 ஓவர்களில் 182/4 என்று பிரமாதமாக வெற்றி பெற்றது.
கடைசியாக டிசம்பர் 2019-ல் தான் இந்திய அணியை மே.இ.தீவுகள் வீழ்த்தியது. உலகக்கோப்பைக்குத் தகுதி பெறாத அணியிடம் தோல்வி தழுவி இந்திய அணி இன்னொரு தேவையில்லாத மைல்கல்லை ஏற்படுத்திக் கொண்டு விட்டது. இந்திய அணி இப்படி ஆடினால் நிச்சயம் உலகக்கோப்பையில் தோல்விகளைக் கண்டு வெளியேற நேரிடும். மீண்டும் ஷிகர் தவானை அணிக்கு அழைக்க வேண்டியதுதான்!! வேறு வழியில்லை. 2007-ல் திராவிட் தலைமையில் மே.இ.தீவுகளில் நடந்த உலகக்கோப்பையில் சந்தித்த அவமானத்தை இந்த முறை தம் சொந்த மண்ணிலேயே இந்திய அணி சந்திக்க நேரிடும் போல் தெரிகிறது.
குடகேஷ் மோட்டி, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஐபிஎல் போன்ற தரமற்ற மட்டைப் பிட்ச் கிரிக்கெட் ஆடி ஆடி இந்திய அணி தேய்மானம் அடைந்து வருவதையே இது காட்டுகிறது. பணம், பவிசு, பவர் இருந்தால் போதுமா? கிரிக்கெட் என்ன ஆனது? சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும், தற்போதைய பிசிசிஐ நிர்வாகம் ஐபிஎல் என்னும் புல்டோசர் மூலம் கிரிக்கெட் சுவரை இடித்து விட்டு சித்திரத்தைக் காற்றில் வரைந்து வருகிறது. காற்றில் வரையும் சித்திரங்களை யார் காண முடியும், யார் தக்க வைக்க முடியும்? வீரர்களின் தரம் மோசமாகிக் கொண்டே வருகின்றது. ரோஹித் சர்மா, விராட் கோலி இருந்திருந்தால்... என்று சிலர் கதைக்கலாம்.. ஆனால் அது வெறும் கதைப்புத்தான், அவர்களது பார்மும் கிரிக்கெட்டும் ஐபிஎல் என்னும் புல்டோசர் தகர்த்தாட்கொண்ட நிலையில்தான் உள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக வாய்ப்பு தருகின்றனர். தொடர்ச்சியாக 10-15 போட்டிகள் வாய்ப்புத் தர வேண்டும். சந்தீப் பாட்டீலின் பயிற்சியின் கீழ் ஆரம்பகாலத்தில் இருந்த எம்.எஸ்.தோனி அத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடித்துதான் 2007 முதல் அணியைக் கட்டமைத்து 2011-ல் உலகக்கோப்பையை வென்றார். ஏற்கெனவெ ஐபிஎல் என்னும் கிரிகெட் அற்ற கிரிக்கெட்டை ஆடி விரிசல் கண்ட வீரர்களது பேட்டிங் திடீர் வாய்ப்புகளினால் எழுச்சி பெற வாய்ப்பில்லை. கோலி, ரோஹித், ஹைப் சூரியகுமார் போன்றோரே சர்வதேச கிரிக்கெட்டில் அதுவும் தொய்ந்து, உடைந்து, கிழிந்து தொங்கும் மே.இ.தீவுகளிடமே பம்மும்போது புதிய வீரர்களின் நிலை பரிதாபம்தான். இந்திய அணிக்குத் தேவை இப்போது ஓர் எழுச்சிமிக்கத் தலைமை. அதற்கு ஐபிஎல்-ஐ பிரதானப்படுத்தும் ஹர்திக் பாண்டியா சரியாக வருவாரா என்பது ஐயமே.
மே.இ.தீவுகள் நேற்று 53/0 என்று நல்ல அடித்தளம் அமைத்தது, ஆனால் ஷர்துல் தாக்கூரின் விக்கெட்டுகளினால் 91/4 என்று சரிவு கண்டது, இந்த வாய்ப்பை ஒர் எழுச்சி மிகு கேப்டன் சரியாகப் பயன்படுத்தி அங்கேயே முடித்திருப்பார், ஆனால் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி குஜராத் டைட்டன்சுக்கு ஆடும்போது இருப்பதை விட உணர்வில் மிக மந்தமாக உள்ளது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 91/4-க்குப் பிறகு மே.இ.தீவுகளின் இன்ஸ்பையரிங் கேப்டன் ஷேய் ஹோப் 68, கார்ட்டி 48 நாட் அவுட் மேலும் விக்கெட்டுகள் விழாமல் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
பந்துகள் திரும்பும் இந்திய ரகப் பிட்சில் இந்தத் தோல்வியை இந்திய அணி சந்தித்தது உலகக்கோப்பை எச்சரிக்கை மணியை அடிக்க வைத்துள்ளது. இந்திய அணி இஷான் கிஷன், ஷுப்மன் கில் மூலம் 90/0 என்ற தொடக்கத்தைக் கண்டது, அதில் ஷுப்மன் கில்லின் ஆட்டம் நிச்சயம் திருப்திகரமானதாக இல்லை. இஷான் கிஷன் ஆட்டமும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருந்ததாகக் கூற முடியாது. 90/1-லிருந்து 113/5 ஆகி விட்டது இந்தியா. பிறகு 146 வரை தட்டுத்தடுமாறி வந்தது 181 ஆல் அவுட் என்று முடிந்தது. சுப்மன் கில் பிரச்சனை என்னவெனில் அவர் அடிக்கப் போகும் போது அவுட் ஆகி விடுகிறார் நேற்றும் அப்படித்தான் தூக்கிக் கையில் கொடுத்து விட்டுச் சென்றார். அவர் எடுத்த 34 ரன்கள் 3 வடிவங்களிலும் கடந்த 7 இன்னிங்ஸ்களில் அவர் எடுத்த அதிக ரன்கள் என்பது எச்சரிக்கை மணியை ஒலிப்பதாகும்.
தேவையில்லாமல் தான் இறங்குவதை விடுத்து தன்னைப் பாதுகாக்கும் ஹர்திக் பாண்டியா அக்சர் படேலை இறக்கி விட்டார், ஆனால் ரொமாரியோ ஷெப்பர்டின் அதிவேக எகிறு பந்து ஒன்று அக்சர் படேலை கபளிகரம் செய்தது. அதே ஷார்ட் பிட்ச் பலவீனம் மீண்டும் வெளிப்படையாக ஜெய்டன் சீல்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தில் ஹர்திக் பாண்டியா நேராகக் கையில் கொடுத்து வெளியேறினார். சஞ்சு சாம்சனுக்கு ஸ்பின்னர் கரியா ஒரு பந்தை திருப்பி எழுப்ப எட்ஜ் ஆகி வெளியேறினார். சூரியகுமா யாதவ்வும், ஜடேஜாவும் மழைக்குப் பிறகு மீட்டெடுக்க முயற்சித்தனர், ஆனால் அவர்கள் பேட்டிங்கையும் பார்க்க முடியவில்லை. ஆனால் கடைசி 5 விக்கெட்டுகளையும் மே.இ.தீவுகள் 35 ரன்களுக்கு எடுத்து விட்டது. ஜடேஜாவும் ஷெப்பர்டின் ஷார்ட் பிட்ச் எகிறு பந்துக்கு பலியானார். சூரியகுமார் யாதவ் 24 ரன்களில் ஸ்பின்னர் மோட்டியிடம் பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
பந்து வீச்சிலும் இந்திய அணி சொதப்பியது, கேப்டன் ஹர்திக் பாண்டியாவே 6.4 ஓவர்களில் 38 ரன்களை விட்டுக் கொடுத்தார், உம்ரன் மாலிக் 3 ஓவர் 27 ரன்கள். முகேஷ் குமார் 3 ஓவர் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஷர்துல் தாக்கூர் மட்டுமே 8 ஓவர் 42 ரன்கல் 3 விக்கெட்டுகள் என்று பரவாயில்லை ரகம்.
இந்தியாவுக்கு எதிராக 2006-க்குப் பிறகு ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு மே.இ.தீவுகளுக்கு உள்ளது. இந்திய அணி நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது. தோல்வி ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாததனால் அல்ல என்பதுதான் முக்கியம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago