WI vs IND | இரண்டாவது ஒருநாள் போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அபார வெற்றி

By செய்திப்பிரிவு

பிரிட்ஜ்டவுன்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்றமேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் விளையாடினர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் விக்கெட்டாக ஷுப்மன் கில் 34 ரன்களுக்கு வெளியேற, இந்திய அணியின் சரிவு தொடங்கியது. அதுவரை சிறப்பாக விளையாடி இந்தத் தொடரில் இரண்டாவது அரைசதம் அடித்த இஷான் கிஷன் 55 ரன்களில் அவுட் ஆனார்.

இதன்பின் வந்தவர்களில் மூவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து நடையைக்கட்ட 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில், மோட்டி மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

முன்னதாக, இப்போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர்களுக்குப் பதில் சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றனர். ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார். என்றாலும், முதல் 90 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்து 90 ரன்களுக்குள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து தடுமாறியது.

182 ரன்கள் இலக்கை துரத்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு பிரண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் இணைந்து அதிரடி ஓப்பனிங் கொடுத்தனர். இவர்கள் கூட்டணியை 54 ரன்களில் பிரித்தார் ஷர்துல் தாகூர். 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து கைல் மேயர்ஸ் அவுட் ஆக, அதேஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த பிரண்டன் கிங்கும் ஷர்துல் தாகூர் பந்தில் விக்கெட்டானார்.

என்றாலும், ஷாய் ஹோப் அரை சதம் அடித்து 63 ரன்களை எடுத்தும், அவருடன் இணைந்து, கியாஸி கார்டி 48 ரன்களும் எடுத்து நம்பிக்கை கொடுக்க 36.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து அபாரமாக எடுத்து வெற்றிபெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்தது .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE