‘எப்போதும் ஆக்ரோஷஆட்டம்தான்’ - அல்டிமேட் டேபிள் டென்னிஸில் அசத்தும் சென்னை பொண்ணு ரீத் ரிஷ்யா

By பெ.மாரிமுத்து

புனே: புனேவில் நடைபெற்று வரும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் டெல்லி தபாங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா சாலஞ்சர்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கால்பதித்தது.

இந்த மோதலில் 4 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 6-6 என சமநிலையில் இருந்தது. ஆனால் கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கோவா அணியின் ரீத் ரிஷ்யா அபாரமாக விளையாடி தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள சகநாட்டைச் சேர்ந்தவரும் டெல்லி தபாங் அணியின் முன்னணி வீராங்கனையுமான ஸ்ரீஜா அகுலாவை எதிர்கொண்டார். இதில் சென்னை பெரம்பூரை சேர்ந்த ரீத் ரிஷ்யா தனது தாக்குதல் ஆட்டத்தால் ஸ்ரீஜா அகுலாவை நிலைகுலையச் செய்ததுடன் தனது திறனால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். அதிலும் கடைசிசெட்டில் ரீத் ரிஷ்யா, ஸ்ரீஜாவை வீழ்த்தியதும் ஆல்வரோ ரோபிள்ஸ் ஓடிவந்து ரீத் ரிஷ்யாவை தூக்கி கொண்டாடினார்.

ரீத் ரிஷ்யா டென்னிசன் கூறும்போது, “டெல்லி அணிக்கு எதிராக 4-வது போட்டி மிக முக்கியமாக இருந்தது. ஆல்வரோ ரோபிள்ஸ் சிறப்பாக விளையாடினார். அவர், பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து ஜான் பெர்சனை வீழ்த்தினார். இதுவே ஆட்டத்தில் எங்களுக்கான வாய்ப்பை தக்கவைத்திருந்தது. கடைசி ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலாவுடன் மோதுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் கடைசி செட்டில் இருவருக்கும் சம அளவில் அழுத்தம் இருந்தது. ஆனால் நான் மூச்சை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட்டேன்.

ஒவ்வொரு புள்ளிகளாக சேர்க்க கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டேன். ஸ்ரீஜா அகுலாவும் அழுத்தத்தில் இருந்தார். இதனால் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தேன். பொதுவாக நான் பிளாக் செய்து விளையாடும் நபர் கிடையாது. ஆக்ரோஷமாக தாக்குதல் ஆட்டத்தையே மேற்கொள்வேன். அப்போதுதான் சீராக புள்ளிகளை குவிக்க முடியும். எனது பலம் பேக்ஹேண்டுதான்.

ஆசிய போட்டிக்கான இந்திய அணிக்கு நான் தேர்வாகவில்லை. அடுத்து தேசிய அளவிலான ரேங்கிங் போட்டி நடைபெற உள்ளது. இது மிகவும் முக்கியமான தொடர். இதில் கலந்துகொள்கிறேன். இதையடுத்து டபிள்யூ டிடி கன்டென்டர்ஸ் தொடர்களில் விளையாட உள்ளேன். தரவரிசையில் முன்னேற்றம் காண்பதற்கு இந்த தொடர்கள் மிகவும் முக்கியம். தற்போது உலக தரவரிசையில் 109-வது இடத்தில் உள்ளேன். அதிகபட்சமாக தரவரிசையில் ஒரு முறை 95-வது இடத்தை எட்டி உள்ளேன்.

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடும் போது அதிகம் கற்றுக்கொள்ள முடிகிறது. நாம் செய்யும் தவறுகளை சரிசெய்து ஆட்ட திறனை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது.

தற்போதைக்கு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துகிறேன். அதற்குதான் எப்போதும் முன்னுரிமை வழங்குவேன். ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் இருந்து கலந்துகொள்ள 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு இந்திய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதும், டாப் 3-ல் இருப்பதும் அவசியம்.

அந்த வகையில் எனக்கான வாய்ப்பை பெறுவதற்கு சாத்தியங்கள் உள்ளன. இப்போதைக்கு அல்டிமேட் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் மட்டுமே கவனம் இருக்கிறது. பெரிய அளவிலான போட்டிகளில் விளையாடுவதற்கு எல்லா வகையிலும் வலுவாக இருக்க வேண்டும். அதற்காக மனதளவிலும் வலுவாகஇருப்பதற்கான பணிகளையும் மேற்கொள்கிறேன்.

வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளுக்கும் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கும் பெரிய வித்தியாசம் என்பது பந்து பயணம் செய்யும் வேகம் தான். இங்கு மேஜைகள்சற்று சமமற்ற நிலையில் இருக்கும். இதனால்பந்து பவுன்ஸ் ஆவதில் மாற்றங்கள் இருக்கும். நாங்கள் இந்த சூழ்நிலையிலேயே விளையாடுவதால் வெளிநாட்டு ஆடுகளங்களில் தொடக்கத்தில் தடுமாற்றங்களை சந்திக்கவேண்டியது உள்ளது. ஆனால் நிலைமையை சமாளித்து ஆட்டத்துக்குள் வந்துவிடுவோம். இவ்வாறு ரீத் ரிஷ்யா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE