காலக் கடிகாரம் அடிக்கத் தொடங்கி விட்டதா?

By பெ.மாரிமுத்து

ரண்டு உலகக் கோப்பை, டெஸ்ட்டில் நம்பர் ஒன் அந்தஸ்து, ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக இரு முறை கோப்பை மற்றும் 4 முறை 2-வது இடம் பெற்றுக் கொடுத்த மகேந்திர சிங் தோனியின் மீதுதான் தற்போது விமர்சன கணைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

அதிலும் ஒரு வீரராகவும், கிரிக்கெட் புரவலராகவும் நம்பிக்கைக்கு புகழ் பெற்றவராகவும் விளங்கிய விவிஎஸ் லக்ஷ்மணிடம் இருந்துதான் அந்த விமர்சனம் பாய்கிறது. அதிலும் ஜாம்பவனாக திகழும் ஒருவரை ஓய்வு பெறவேண்டும், இளம் வீரருக்கு வழிவிட வேண்டும் என சாதாரணமாக கருத்தை அள்ளித் தெளிக்கிறார்.

உள்ளூர் தொடரை ஒளிபரப்பும் ஒரு சானலின் சார்பில் போட்டியை அலசி ஆராய்ந்து கூறும் முன்னாள் வீரர் ஒருவர் எப்படி இவ்வளவு துணிச்சலாக கருத்துகளை முன்வைக்க முடிகிறது என்பதும் ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வியை முன்வைத்துள்ளது. பெரும்பாலும் அனைத்து வீரர்களும், போட்டியை ஒளிபரப்புபவர்களும் பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படுவதுண்டு.

லக்ஷ்மண் மட்டும் அல்ல அவருடன் மேலும் இரு வீரர்களும் டி20 ஆட்டத்தில் தோனிக்கு பதிலாக மாற்று வீரரை கொண்டுவர வேண்டும் என விமர்சனங்களை தொடுத்துள்ளனர். தேர்வுக்குழுவோ, அணி நிர்வாகமோ தோனிக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காத நிலையில் வெளிப்புற காரணிகளாக அழுத்தம் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் ராஜ்கோட் போட்டியில் தோனி விளையாடிய விதம் தான். ஒரு முனையில் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் 160 என்ற நிலையில் மட்டையை விளாசிய நிலையில், மறுமுனையில் தோனி ஸ்ட்ரைக் ரேட் 80 என்ற நிலையில் விளையாடி அழுத்தத்தை அதிகமாக்கினார். அத்துடன் விராட் கோலிக்கு அவர் ஸ்டிரைக் கொடுக்கவில்லை.

சிங்கிள் ரன் ஓடிவிட்டு பார்மில் உள்ள பேட்ஸ்மேனுக்கு எப்போதும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் தோனியின் மந்திரம் அன்று மாய்ந்து போனது. தோல்விக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக கூறப்படுவது இதுதான். கோலியுடன் இணைந்து தோனி 44 பந்துகளை எதிர்கொண்டிருந்தார்.

ஆனால் தோனி இதில் 24 பந்துகளில் வெறும் 25 ரன்களையே சேர்த்தார். இதனால் போதுமான வாய்ப்பு கிடைக்காததால் அலட்சியமான ஷாட் விளையாடி விக்கெட்டை இழந்தார் கோலி. விராட் கோலி களத்தில் இருந்த போது வீசப்பட்ட 87 பந்துகளில் 42 பந்துகளை எதிர்கொண்டிருந்தார்.

தோனி சேர்த்த ரன்களில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். அதாவது 49 ரன்களில், பவுண்டரிகள், சிக்ஸர்கள் வாயிலாக மட்டும் 26 ரன்கள் சேர்த்தார். இதை தவிர்த்து எஞ்சிய 23 ரன்களை அவர் 32 பந்துகளில்தான் எடுத்தார். மேலும் அவர் கடைசியாக சேர்த்த 24 ரன்கள் போட்டி ஏறக்குறைய வெற்றி பெற முடியாத நிலையை எட்டியபிறகு வந்ததே.

தோனி 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தது நல்ல முயற்சி என்று வாதத்தை கோலி உட்பட அவரது ஆதரவாளர்கள், முன்வைக்கின்றனர். இந்த ஆட்டத்தில் 109 ரன்கள் விளாசிய டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான காலின் மன்ரோவுக்கு 3 கேட்ச்கள் கோட்டை விடப்பட்டது, நமது அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 4 பேரும் ஒட்டுமொத்தமாக 30 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இப்படியிருக்க தோல்விக்கு தனிப்பட்ட நபராக தோனியை மட்டும் இலக்காக்குவது ஏன்? என்ற கேள்விகளும் உதிக்காமல் இல்லை.

தோனி களமிறங்கிய சூழலில் அணியின் வெற்றிக்கு 65 பந்துகளில் 130 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா 6 மட்டையாளர்களை கொண்டே களமிறங்கியது. அதில் டாப் ஆர்டர் 4 பேர் ஏமாற்றம் அளித்தனர். ஒரு பந்துக்கு சராசரியாக 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தட்டையான ஆடுகளம் தோனியின் பேட்டிங்குக்கு கைகொடுக்கவில்லை.

அவர், செய்த தவறு முதல் 25 பந்துகளில், 9 பந்துகளில் ரன் சேர்க்காமல் இருந்தது தான். இதில் சுழற்பந்து வீச்சில் 6 பந்துகளை அவர் வீணடித்தது தான் ஆட்டத்தின் திசையை மாற்றியது. அவரது இந்த இன்னிங்ஸ் ஆட்டத்தின் முடிவை சிதைப்பதாக அமைந்தது.

உண்மையில் இந்த இன்னிங்ஸ் தோனி கடந்த இரு வருடங்களாக சற்று தடுமாறி வரும் போக்குக்கு கால் புள்ளி தான். 2016 தொடக்கம் முதலே, அனைத்து டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் கடைசி 10 ஓவர்களில் சுழற்பந்து வீச்சில் ஓவருக்கு 6.87 ரன்கள் என்ற விகிதத்தில்தான் தோனி எடுத்து வருகிறார்.

இந்தக் காலக்கட்டத்தில் எதிர்கொண்ட 46% சுழற் பந்து வீச்சில் பெரிய அளவில் தோனியால் ரன்கள் எடுக்க முடியவில்லை. இது சுழற்பந்து வீச்சில் அவர் ரிஸ்க் எடுக்க விரும்பாததை உணர்த்துவதாகவே தெரிகிறது. ஜனவரி 2016 முதலே ஒவ்வொரு 10 பந்துக்கும் ஒரு பவுண்டரி என்று கூட தோனியினால் ஸ்கோர் செய்ய முடியவில்லை என்று இணையதளம் ஒன்று புள்ளிவிவரமாக தெரிவித்துள்ளது.

ஒருவேளை இந்த பலவீனத்தைதான் நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும். தோனி எதிர்கொண்ட 18 சுழற்பந்துகளில் 7-ல் ரன் சேர்க்கவில்லை. அவர் அடித்து விளையாட முயன்ற நிலையில் சான்டரும், இஷ் சோதியும் கால்காப்புக்கு பந்துகளை வீசி கட்டுப்படுத்தினர். இது, தோனி ஒன்றும் களத்தில் எந்த பகுதியில் பந்து வீசப்பட்டாலும் 360 டிகிரிக்கு வளைந்து சென்று அடிக்கும் வீரர் அல்ல என்பதை உணர்த்தியது.

லக்ஷ்மணின் பார்வையில், கடந்த இருவருடங்களாக டி20-ல் தோனியின் ஆட்டம் கடைசி 10 ஓவர்களில் போதுமானதாக இல்லை என்பதுதான். இளம் வீரருக்கு வாய்ப்பு என்ற விஷயத்தில் தோனிதான் முடிவு எடுக்கவேண்டும் தேர்வுக் குழுவினர் இல்லை என்று மறைமுகமாகவும் சாடியுள்ளார்.

2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்தே, டி20-ல் இருந்து தோனி தன்னை விடுவிடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது தற்போது வலுக்க தொடங்கி உள்ளது. தோனியின் மீதான விமர்சனங்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.

ஏனேனில் விராட் கோலிக்கு, ஒரு ஹீரோவாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார் தோனி. மேலும் கோலியின் தொடக்க கால கிரிக்கெட்டில் அவருக்கு, தோனி கொடுத்த ஆதரவு அளப்பரியது. எல்லாவற்றுக்கும் மேலாக களத்தில் இக்கட்டான சூழ்நிலைகளில் ‘நிழல் கேப்டனாக’ செயல்படுவதும் தோனிதான். விராட் கோலி, டீப் திசையில் பீல்டு செய்யும் போது இன்றைக்கும் தோனிதான் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனைகளையும், பீல்டிங் வியூகத்தையும் அமைப்பவராக உள்ளார்.

பிரதானமான பிரச்சினை என்னவென்றால் டி20 ஆட்டங்களில் தோனி, பார்முக்கு வர அதிக பந்துகளை எதிர்கொள்கிறார் என்பதுதான். ஒருநாள் போட்டிகளின் ஆட்ட யுக்திகளுக்கு இது சரியாக பொருந்தும். ஆனால் டி20-க்கு விரைவாக மட்டையை சுழற்ற வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் தோனி தற்போது இந்த வகையில்தான் மாட்டிக்கொண்டுள்ளார்.

ஒருநாள் போட்டிகளிலும் சமீபகாலமாக தட்டையான ஆடுகளத்தில் தோனி தானும் அழுத்தத்துக்கு உள்ளாகி, சக வீரர்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறார். இந்த ஆண்டு ஆன்டிகுவா போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக குறைந்த ரன்கள் இலக்கை துரத்திய போது தோனி நீண்ட நேரம் களத்தில் நின்று அதிக பந்துகளை எதிர்கொண்ட போதும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க தவறினார். தற்போது டி20 ஆட்டத்திலும் சக வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஆனால் கேப்டன் விராட் கோலியோ, தோனியின் தடுமாற்றம் மற்றும் அதனால் எதிர்முனையில் இருக்கும் வீரருக்கு ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றை இதுவரை உணர்பவராக இல்லை. வயதின் காரணமாகவே தோனி, இலக்காகப்படுகிறார் எனவும் கோலி வாதிடுகிறார்.

கோலியின் தலைமையின் கீழ் இதுவரை இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி இழக்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து இதுவரை இந்திய அணி 34 ஆட்டங்களில் விளையாடி 8-ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. அதேவேளையில் டி20-ல் 21 ஆட்டங்களில் விளையாடி 9-ல் மட்டும்தான் தோல்வியை சந்தித்துள்ளது.

எப்படியோ வெற்றியின் குதிரை மேல் தொடர்ந்து பயணம் செய்ய கோலிக்கு அனைத்து வகையிலும் தோனி தேவையாக உள்ளார். எனினும் அவர் இருக்கும் போதே, சிறந்த வீரரை உருவாக்கிக் கொண்டால் அணியின் வெற்றிப் பயணத்தில் தடங்கல் இருக்காது. எப்படியிருப்பினும் தற்போது எழுந்துள்ள விமர்சனங்கள் குறுகிய வடிவிலான போட்டிகளில் தோனிக்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும் காலக்கடிகாரம் அடிக்க தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்