“இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை” - ஓய்வு குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன்

By செய்திப்பிரிவு

லண்டன்: தனது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் ஆஷஸ் தொடரில் அவர் விளையாடி வருகிறார்.

விரைவில் 41-வது வயதை எட்ட உள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், அணியில் இடம் பிடிப்பதற்கான சவால் குறித்து தான் அறிவேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 2002-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2003-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். இதுவரை 182 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 689 விக்கெட்டுகளை கைப்பறியுள்ளார். டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 என அனைத்தையும் சேர்த்து 976 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயங்கள் ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு அடியையும் களத்தில் கொஞ்சம் உஷாராக எடுத்து வைக்க வேண்டும். ஆண்டர்சன் இந்த காயங்களை எல்லாம் கடந்து தான் சாதனை படைத்துள்ளார். அதற்காக தன்னை தானே வருத்திக் கொள்கிறார். அதற்கான பலனையும் அறுவடை செய்து வருகிறார். அதனால் இங்கிலாந்து நாட்டவர்கள் என்று மட்டுமல்லாது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். இந்த சூழலில் தான் ஓய்வு குறித்து பேசியுள்ளார்.

“நான் சிறப்பான முறையில் பந்து வீசி வருவதாக கருதுகிறேன். இந்த தொடரில் (ஆஷஸ் 2023) நான் எதிர்பார்த்தது கைகூடவில்லை. அனைத்து வீரர்களும் தங்கள் கேரியரில் இது மாதிரியான சூழலை கடந்து வந்தவர்கள் தான். என்ன அது இந்த மாதிரியான பெரிய தொடரில் இல்லாமல் இருந்திருக்கலாம். 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்திருந்தால் அணியில் எனக்கான வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கும். இப்போது எனது வயது காரணமாக கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். என்னால் அதை புரிந்து கொள்ள முடிகிறது.

பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உடன் பேசினேன். நான் அணியில் இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். எனக்குள் வேட்கை இருக்கும் வரையில் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். இப்போதைக்கு இது தான் எனது நிலைப்பாடு” என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE