இன்டர் மியாமிக்காக 2 கோல்கள் பதிவு செய்த மெஸ்ஸி; அசிஸ்ட் செய்தும் அசத்தல்!

By செய்திப்பிரிவு

புளோரிடா: இன்டர் மியாமி கிளப் அணிக்காக கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரரான லயோனல் மெஸ்ஸி, அட்லாண்டா யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தியுள்ளார். அதோடு சக வீரர் கோல் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து உதவியுள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனான மெஸ்ஸி, தற்போது அமெரிக்க நாட்டின் கால்பந்து கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தான் தனது முதல் போட்டியில் இன்டர் மியாமிக்காக அவர் விளையாடி இருந்தார். அந்த போட்டியில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தான் மெஸ்ஸி களம் கண்டார்.

இந்நிலையில், அட்லாண்டா யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே ஆடும் வாய்ப்பை மெஸ்ஸி பெற்றார். ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் முதல் கோலை அவர் ஸ்டிரைக் செய்தார். தொடர்ந்து 22-வது நிமிடத்தில் மற்றொரு கோலை பதிவு செய்தார். தனக்குள் இருக்கும் அந்த வெற்றி வேட்கையை தன் அணிக்குள் பாய்ச்சினார்.

ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பந்தை லாவகமாக அப்படியே தட்டிச் சென்று, தனக்கு இடது பக்கம் இருந்த ராபர்ட் டைலருக்கு பாஸ் கொடுத்தார். அதை சரியாக பயன்படுத்தி டைலர் அதனை கோலாக மாற்றினார். இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லீக்ஸ் கோப்பை தொடரின் ‘ஜே’ பிரிவில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளை பெற்றுள்ளது அந்த அணி.

இன்டர் மியாமி அணிக்காக இதுவரை 114 நிமிடங்கள் (2 போட்டிகளையும் சேர்த்து) களத்தில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 3 கோல்கள் பதிவு செய்துள்ளார். “அவர் உலகின் தலைசிறந்த வீரர். அவருடன் விளையாட வேண்டும் என விரும்பினேன். இப்போது அந்த கனவு பலித்து உள்ளது” என்கிறார் ராபர்ட் டைலர். இன்டர் மியாமி அணி அடுத்ததாக ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் விளையாட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE