ஹர்மன்பீரித் நடந்துகொண்ட விதம் சரியல்ல: அப்ரீடி விமர்சனம்

By செய்திப்பிரிவு

லாகூர்: எதிர்கால தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்திய கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரீடி தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நடத்தை விதிகளை மீறியதாக கூறி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது. மேலும், அவரது போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த தண்டனையால் ஹர்மன்பிரீத் கவுரால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை விளையாட முடியாமல் போகும்.

இந்த நிலையில், ஹர்மன்பிரீத் செயலை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரீடி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. கடந்த காலங்களிலும் கிரிக்கெட்டில் நாம் இவற்றைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் பார்த்திருக்க முடியாது. களத்தில் அவரது செயல்பாடு அதிகமாகவே இருந்தது. நீங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருக்கையில் உங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

முன்னதாக, ஹர்மன்பிரீத் நடவடிக்கைகு வங்கதேச கிரிக்கெட் வாரியமும் அதிருப்தி தெரிவித்தது. இந்திய முன்னாள் வீரர்கள் சிலர் அவரது நடவடிக்கைகளை விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE